நியூசிலாந்து கிரிக்கெட் அணி pt web
விளையாட்டு

SA vs NZ | 92 ஆண்டு கனவு... 18ஆவது முயற்சி... கனவை நனவாக்கிய நியூசிலாந்து அணி!

தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

Angeshwar G

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

முதல் டெஸ்ட் போட்டி பே ஓவல் மைதானத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 511 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் அடித்திருந்தார். 240 ரன்களை குவித்த அவருக்கு அடுத்தபடியாக வில்லியம்சன் 118 ரன்களைக் குவித்திருந்தார். இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்களுக்கு 179 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் வில்லியம்சன் சதமடித்து அசத்தி இருந்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலமாக 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரட்டை சதம், இரண்டு இன்னிங்ஸ்களிலும் 3 விக்கெட்களை வீழ்த்திய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 269 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதுவரை 172 இன்னிங்ஸ்களில் 32 சதங்களை விளாசியுள்ளார். ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் வில்லியம் ஓரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.

இந்த தொடர் வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தனது 92 ஆண்டுகால கனவை நனவாக்கியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ளது. 92 ஆண்டுகளில் 18 ஆவது முயற்சியின்போது இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாக on-air comms குறிப்பிட்டுள்ளது.

1931 ஆம் ஆண்டிற்கு பின் நடந்த 17 டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து அணி 13 போட்டிகளில் தோல்வியும் 4 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது.

நியூசிலாந்து தொடருக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாம் கட்ட வீரர்களை அனுப்பியதாக விமர்சனம் எழுந்த போதே இந்த தொடரில் நியூசிலாந்து அணி வெல்லும் என்றே சொல்லப்பட்டது. இருப்பினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தனர்.