விளையாட்டு

மிரட்டிய நியூசிலாந்து ! படுதோல்வியடைந்த இந்தியா

மிரட்டிய நியூசிலாந்து ! படுதோல்வியடைந்த இந்தியா

webteam

நியூசிலாந்திற்கு எதிரான 4 வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் வெற்ற பெற்ற இந்திய அணி, மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி, ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. 

கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். இது அவருக்கு 200 வது ஒரு நாள் போட்டி. கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தோனி, இன்றைய போட்டியிலும் ஆடவில்லை.

நான்காவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 7 ரன்களிலும், ஷிகர் தவான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷுப்மன் கில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார்.

சரிவில் இருந்த இந்தியாவை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராயுடுவும், கார்த்திக்கும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதற்கடுத்து ஜாதவும் புவனேஷ்குமாரும் தலா 1 ரன்களில் அவுட்டாகினர். 

தாக்குபிடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட ஹர்த்திக் பாண்டியா ஒரு ஓவரில் அடுத்தடுத்து 3 பந்துகளை பவுண்ரிக்கு தள்ளினார். ஆனால் அந்த சந்தோஷம் ரசிகர்கள் மத்தியில் முடிவதற்குள் அவரும் 16 ரன்னில் அவுட்டானார்.

இவரையடுத்து களம் இறங்கிய குல்தீப் யாதவ் 15 ரன்னிலும், கலீல் அகமது 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சாகல் மட்டும் 37 பந்துகளுக்கு 18 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி 30.5 ஓவருக்கு 92 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் போல்ட் 5 விக்கெட்டுகளையும் கிரேண்ட்தோம் 3 விக்கெட்டுகளையும் அஸ்டில் மற்றும் ஜேம்ஸ் நீசம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் பந்தில் 6 அடித்து அபாரமான ஆட்டத்தை தொடங்கி வைத்தார் குப்தில். அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் நான்காவது பந்தில் குப்திலை அவுட்டாக்கினார் புவனேஷ்குமார். 

இதையடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்த நியூசிலாந்து அணி 14.5 ஓவரில் 93 ரன்கள் அடித்து வெற்றி கனியை பறித்தது. இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.