விளையாட்டு

போல்ட் வேகத்தில் 121 ரன்களுக்கு சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்!

webteam

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி, அபார வெற்றிபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந் நிலையில் இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. 

இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் ஆடவில்லை. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வொர்க்கரும் முன்றோவும் களமிறங்கினர். இவரும் அடித்து ஆடினர். பின்னர் முறையே, 58, 30 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராஸ் டெய்லர் 57 ரன்களும் நிக்கோல்ஸ் 83 ரன்களும் அஸ்லே 49 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவு அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை குவித்தது.

கடினமான இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. லெவிஸ் 10, ஹோப் 4, ஷாய் ஹோப் 2, ஹெட்மைர் 2 முகமது 18, கேப்டன் ஹோல்டர் 13, பாவெல் 0 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆக, நர்ஸ் மட்டும் அணியின் கவுரவத்தைக் காப்பாற்றப் போராடினார். அவரும் 27 ரன்களில் அவுட்டாக, அந்த அணி 28 ஒவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
நியூசிலாந்து தரப்பில் போல்ட் 7 விக்கெட்டுகளையும் பெர்குசான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது போல்ட்-டுக்கு வழங்கப்பட்டது.