இங்கிலாந்துடன் இன்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையே முதல் டி-20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி வெலிங்கடனில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி, நெல்சனில் இன்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கிராண்ட்ஹோம் 35 பந்துகளில் 55 ரன்களும் குப்தில் 33 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மலன் 55 ரன்களும் வின்ஸ் 49 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் பெர்குசான், டிக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் சோதி, சட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது நியூசிலாந்து அணி.