விளையாட்டு

தோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து

தோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து

webteam

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணி 237 ரன்கள் சேர்த்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 5 (4) ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கோலின் முன்ரோ 12 (17) ரன்களில் அவுட் ஆகினார்.

இதற்கிடையே வந்த கேப்டன் வில்லியம்சன் நிலைத்து விளையாட, அவருடன் ஜோடி சேரமால் ராஸ் டைலர் 3 (8) ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த கீப்பர் டாம் லதாம் 1 (14) ரன் மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 46 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்த நினைத்தார். அவரும் 41 (69) ரன்களில் அவுட் ஆக, 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து அணி பரிதாப நிலையை அடைந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் நீஷம் மற்றும் கோலி டி கிராண்ட்ஹோம் பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். இருவரும் அசத்தலாக அரைசதம் அடிக்க 200 ரன்களை கடந்தது நியூஸிலாந்து. அணியின் ஸ்கோர் 215 ரன்களாக இருக்கும்போது, கிராண்ட்ஹோம் 64 (71) ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டமிழக்காத நீஷம் 97 (112) ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிதி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.