விளையாட்டு

‘அவங்க எல்லாருமே சின்னப் பசங்க... அங்கதான் எல்லாமே மாறிப் போச்சு’ - ஷிகார் தவான் விளக்கம்!

‘அவங்க எல்லாருமே சின்னப் பசங்க... அங்கதான் எல்லாமே மாறிப் போச்சு’ - ஷிகார் தவான் விளக்கம்!

சங்கீதா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் விளக்கம் அளித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆக்லாந்து எடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 306 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களும், கேப்டன் தவான் 72 ரன்களும், ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து சார்பில் லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சவுதி தலா 3 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.1 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 309 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவுசெய்தது. நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் டாம் லாதம் 145 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்களும் அதிகப்பட்சமாக எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் சர்வதேச அறிமுகப் போட்டியிலேயே தலா 2 விக்கெட்டுகளை உம்ரான் மாலிக்கும், ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ஷிகார் தவான் விளக்கம் அளித்துள்ளார். போட்டிக்குப் பின் பேசிய அவர், “பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல இலக்கையே எட்டியிருந்தோம். அதேபோல பந்துவீச்சிலும் முதல் 10-15 ஓவர்களில் அபாரமாகவே செயல்பட்டு எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால் அதன்பிறகு நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக ஷார்ட் பந்துகளை தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தோம். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட டாம் லாதம், சிறப்பாக அட்டாக் செய்தார். அதிலும் 40-வது ஓவரில் இருந்து ஆட்டம் அப்படியே நியூசிலாந்து பக்கம் சென்றது.

40-வது ஓவரில் ஷர்துல் தாகூர் ஷார்ட் பந்துகளை வீசியதால், டாம் லாதம் அதனை எளிதாக எதிர்கொண்டு, 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் சென்றது. அந்த ஓவரில் தான் ஆட்டம் திசைமாறியது. இங்கு மகிழ்ச்சியாகவே நாங்கள் விளையாடினோம். எனினும் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அது நடந்து முடிந்துவிட்ட ஒன்று.

அணியில் உள்ள அனைவரும் இளம் வீரர்கள். இதிலிருந்து நிறையப் பாடம் கற்றிருப்பார்கள். நாங்கள் எங்கள் திட்டங்களை மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுத்த வேண்டும். மேலும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை அவர்களின் பலத்தில் விளையாட விடாமல் பந்துவீச்சில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். மற்ற மைதானங்களை விட சற்று வித்தியாசமானததாக உள்ளது இந்த மைதானம். அதற்கேற்ப திட்டமிட வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்தியா - நியூசிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டன் நகரில் செடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.