விளையாட்டு

203 ரன்களை ஊதித்தள்ளிய இந்தியா - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

203 ரன்களை ஊதித்தள்ளிய இந்தியா - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

webteam

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நியூஸிலாந்தின், ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கோலின் முன்ரோ 59(42), ராஸ் டைலர் 54(27) மற்றும் கேப்டன் வில்லியம்சன் 51(26) ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரும் இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 7 (6) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் அடுத்தடுத்து வந்த வீரர்களின் அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ரன்கள் குவித்து இலக்கை எளிதாக எட்டியது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 58 (29), லோகேஷ் ராகுல் 56 (27) மற்றும் விராட் கோலி 45 (32) ரன்கள் குவித்தனர். வெற்றிக்கு வழிவகுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.