விளையாட்டு

சரிந்த அணியை மீட்ட கவாஜா, கரே - ஹாட்ரிக் விக்கெட் எடுத்த போல்ட்

சரிந்த அணியை மீட்ட கவாஜா, கரே - ஹாட்ரிக் விக்கெட் எடுத்த போல்ட்

rajakannan

உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 244 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. 

லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வார்னர் 16, ஆரோன் பின்ச் 8, ஸ்மித் 5, ஸ்டொய்னிஸ் 21, மேக்ஸ்வெல் 0 என ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 92 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

சரிந்த அணியை கவாஜா, கரே ஜோடி மீட்டது. இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேரே சற்று அதிரடியாக விளையாடி 72 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை போராடிய கவாஜா 50வது ஓவரில் 88 ரன்களுக்கு அவுட் ஆனார்.

கவாஜா விக்கெட்டை தொடர்ந்து அடுத்த இரண்டு பந்துகளில் ஸ்டார்க், பெஹ்ரெண்டம் ஆகிய இருவரை அடுத்தடுத்து வெளியேற்றினார் ட்ரெண்ட் போல்ட். இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் சமிக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் போல்ட் 4 விக்கெட் சாய்த்தார். பெர்குசன், நீசம் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதியை உறுதி செய்யும்.