மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்திற்கு 297 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று 2க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால், விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிருத்வி ஷா 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல், 113 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்ரேயாஸ் ஐயர், 63 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
மனிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்த நிலையில் பெனட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தாக்கூர், ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கவுள்ளது.