விளையாட்டு

ஆத்தாடி, என்னா அடி: நியூசி. பெண்கள் கிரிக்கெட் ஆஹா சாதனை!

ஆத்தாடி, என்னா அடி: நியூசி. பெண்கள் கிரிக்கெட் ஆஹா சாதனை!

webteam

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, 50 ஓவர்களில் 490 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை விளாசி தள்ளியது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது. ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டியின் அதிகப்பட்ச ஸ்கோர், இதுதான்!
நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸூசி பேட்ஸ், 94 பந்துகளில் 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேடி கிரீன் 77 பந்துகளில் 121 ரன்களும், அமெலியா கெர் 45 பந்துகளில் 81 ரன்களும் குவித்தனர்.

பெண்கள் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 1997 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 455 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தங்களது முந்தைய உலக சாதனையை, அந்த அணியே இப்போது முறியடித்துள்ளது. ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு 444 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்சமாக இருக்கிறது.

அயர்லாந்து தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் கேரா முர்ரே 10 ஓவர்களில் 119 ரன்களையும் லிட்டில், மார்டிஸ், லெவிஸ் ஆகியோர் தலா 92 ரன்களையும் வாரி வழங்கினர். இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, 35.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லெய் காஸ்பரக் 2.3 ஓவர்கள் வீசி, 17 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சாதனை நிகழ்த்தியுள்ள நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.