இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதே தங்களால் உலகக் கோப்பை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை கொடுத்ததாக நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சோஃபி டிவைன் கூறியிருக்கிறார். தொடர் சரிவைச் சந்தித்து வந்த அந்த அணி, அந்த வெற்றிக்குப் பிறகு தான் உத்வேகம் பெற்றதாகக் கூறியிருக்கிறார் டிவைன். பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து. இதுதான் அந்த அணியின் முதல் டி20 உலகக் கோப்பை பட்டம். ஆனால் இந்தத் தொடருக்கு முன்பு யாருமே அந்த அணி வெற்றி பெறும் என்று கருதவில்லை. ஏனெனில், அவர்களின் ஃபார்ம் அவ்வளவு மோசமாக இருந்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அந்த அணி, முதல் போட்டியிலேயே இந்தியாவை வீழ்த்தி ஷாக் கொடுத்தது.
அந்த வெற்றி சாதாரண வெற்றியாக அமையவில்லை. 58 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது நியூசிலாந்து. முதலில் ஆடி 160 ரன்கள் குவித்த அந்த அணி, பலமான இந்திய பேட்டிங்கை 102 ரன்களுக்குள் சுருட்டியது. அந்த முழுமையான செயல்பாடு தான் தங்கள் அணிக்கு நம்பிக்கை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன்.
போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், எந்தத் தருணம் அவர்கள் வெற்றிப் பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று டிவைனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்த வெற்றிக்கு ஏதாவது ஒரு போட்டியையோ, ஒரு தருணத்தையோ குறிப்பிட்டுக் காரணமாக சொல்ல முடியாது. ஒருவேளை சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியைச் சொல்லலாம். தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அதுதான் நாங்கள் வெளிக்காட்டிய முழுமையான செயல்பாடு என்று நினைக்கிறேன். அனைத்துமே அந்தத் தருணத்தில் ஒன்றாகக் கைகூட வந்தன. அந்தப் போட்டி தான் எங்கள் அணிக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுத்தது. எங்களால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும் என்று அனைவருக்கும் ஊக்கம் கொடுத்தது. அது எங்களுக்கு மிகப் பெரிய தருணம். அதுதான் எங்களை இப்போது கோப்பையோடு நிற்க வைத்திருக்கிறது.
நான் சொல்லியதுபோல் நாங்கள் எதனால் இந்த இடத்துக்கு வந்தோம் என்று குறிப்பிட்டு சொல்லிவிட் முடியாது. ஒவ்வொருவருமே போட்டியைப் பற்றித்தான் நினைக்கிறோம். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. களத்தில் என்று எடுத்துக்கொண்டால் நிச்சயம் அது இந்தியாவுக்கு எதிரான வெற்றி தான். அதுதான் இதற்கான உத்வேகம் கொடுத்தது" என்று கூறினார். அந்தப் போட்டியில் வென்றதனால் தான் நியூசிலாந்தால் அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது. ஒருவேளை அந்த அணி தோற்றிருந்தால், அவர்களுக்குப் பதிலாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும். கிட்டத்தட்ட நாக் அவுட் ஆக கருதப்பட்ட அந்த ஆட்டத்தில் இந்தியா தோற்கும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டதற்கு தங்கள் பயிற்சியாளர் குழுவும் மிகமுக்கியக் காரணம் என்று கூறினார் டிவைன்.
"எங்கள் பயிற்சியாளர் குழு போதுமான பாராட்டைப் பெறுவதில்லை என்று நான் நினைக்கிறேன். அணி சரியாக செயல்படாதபோது விமர்சகர்களோ, மீடியாவோ இல்லை வெளி ஆட்களோ முதலில் குறை சொல்வது பயிற்சியாளர் குழுவைத் தான். ஆனால் வெற்றி பெறும்போது அவர்களை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் மோசமான சூழ்நிலையில் இருந்தபோது அவர்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள், ஊக்கம் கொடுத்தார்கள். நாங்கள் விளையாட விருப்பப்படும் ஆட்டத்தை, எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது எங்களால் உலகக் கோப்பையையும் வெல்ல முடியும் என்று கூறினார்கள்.
பென் சாயர் (தலைமைப் பயிற்சியாளர்), டீன் பிரவுன்லீ (அசிஸ்டென்ட் கோச்), சமீபத்தில் அணியில் சேர்ந்த கிரெய்க் மெக்மில்லன் (பேட்டிங் கோச்), பால் வீஸ்மென் (ஸ்பின் பௌலிங் ஆலோசகர்) ஆகியோர் மிகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல முன்பு பணியாற்றிய கிரெய்க் ஹோவார்ட் கூட ஸ்பின்னர்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். முன்னாள் பௌலிங் கோச் ஆண்ட்ரே ஆடம்ஸ் கூட இந்த அணியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்" என்று தங்கள் பயிற்சியாளர் குழுவைப் பாராட்டினார் அவர். மேலும் பேசிய நியூசிலாந்து கேப்டன், "இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல மனிதர்கள் இந்த அணியோடு இணைந்து எங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார்கள். பல விஷயங்களில் மெருகேறக் காரணமாக இருந்திருக்கீறார்கள். அவர்கள் இந்த அணியின் வீரர்களுக்கும், இந்த அணிக்கும், நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கும் ஆற்றிய பங்களிப்பு நாங்கள் இங்கு உலகக் கோப்பையோடு இருப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அவர்களுக்கு இன்னும் அதிக பாராட்டுகள் கொடுக்கப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் தான் களத்தில் சென்று விளையாடுகிறோம். ஆனால் எங்களி தயார் படுத்த, திட்டமிட அவர்கள் செலவளித்த எண்ணிலடங்காத நேரத்தையெல்லாம் பார்க்கும்போது அவர்களையும் நிச்சயம் கொண்டாடவேண்டும். அவர்கள் அதிகம் கொண்டாடப்படாத ஹீரோக்கள்" என்றார்.