விளையாட்டு

கடைசியில் மிரட்டிய ஜேமிசன்..ஆல் அவுட்டானது நியூசிலாந்து ! இந்தியா 7 ரன்கள் முன்னிலை

கடைசியில் மிரட்டிய ஜேமிசன்..ஆல் அவுட்டானது நியூசிலாந்து ! இந்தியா 7 ரன்கள் முன்னிலை

jagadeesh


இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ஜ் நகரில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஹனுமன் விஹாரி 55(70), பிருத்வி ஷா 54(64), புஜாரா 54(144) ஆகியோர் அரைசதம் அடித்து சற்றே ஆறுதல் அளித்தனர். மயங்க் அகர்வால் 7, விராட் கோலி 3, ரஹானே 7, ரிஷப் பண்ட் 12, ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் முகமது சமி 12 பந்துகளில் 16 ரன்களும், பும்ரா 11 பந்துகளில் 10 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, நியூசிலாந்து அணி நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்தது. இந்திய வீரர்கள் முயற்சிக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளதால் நிச்சயம் இரண்டாவது நாளில் நியூசிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் எளிதில் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அணி விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இன்றைய ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள் பிளண்டல் மற்றும் லாத்தம் பொறுமையாக விளையாடினர். ஆனால், பிளண்டல் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில் பும்ராவின் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். மேலும், அனுபவ வீரரான ராஸ் டெய்லரும் வெகுநேரம் விளையாடவில்லை. அவர் 15 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த லாத்தம் 52 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய நிக்கோல்ஸ், வாட்லிங், சவுத்தி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதயனடுத்து களமிறங்கிய கிராண்ட் ஹோம் 26 ரன்களிலும், வாக்னர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். எப்போதும்போல இம்முறையும் இந்திய பவுலர்கள் டெயில் என்டர்களின் விக்கெட்டை வீழ்த்த திணறினர். இதனால் பந்துவீச்சாளர் ஜேமிசன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஜேமிசன் - வாக்னர் ஜோடி இணைந்து 50 ரன்கள் எடுத்து இந்திய அணியை சோதித்தது. ஜேமிசன் பவுண்டரிகளாக விளாசினார். இறுதியாக, ஜடஜாவின் அசத்தலான கேட்சில் வாக்னர் ஆட்டமிழக்க, ஜேமிசன் 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்தியா 7 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.