விளையாட்டு

நியூசிலாந்து அசத்தல் பந்து வீச்சு: 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

நியூசிலாந்து அசத்தல் பந்து வீச்சு: 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

jagadeesh

நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 20 ஓவரில் 165 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 4-வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டிம் சவுத்தி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் மட்டுமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் பெரியளவில் சோபிக்கவில்லை. கோலி 11 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்களுடனும், ஷிவம் துபே 12 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுலும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். சரிவிலிருந்த அணியை ஓரளவுக்கு காப்பாற்றியது மணீஷ் பாண்டேவின் பொறுப்பான ஆட்டம்தான். இதில் புயலாய் வந்த ஷர்துல் தாக்கூர், 20 ரன்கள் எடுத்து ரன் ரேட்டை உயர்த்தினார். இதன் பின்பு வந்து மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் விரைவாகவே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய மணீஷ் பாண்டே மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அரை சதம் அடித்தார். இவர் 36 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். கடைசியாக 20 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்தின் இஷ் சோதி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.