விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்காக புதிய திட்டம்; 4200 அடி உயரத்தில் தீவிர பயிற்சியில் இலங்கை

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்காக புதிய திட்டம்; 4200 அடி உயரத்தில் தீவிர பயிற்சியில் இலங்கை

webteam

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதற்காக கடல் மட்டத்தில் இருந்து 4200 அடி உயரத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இலங்கை அணி.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுவதற்காக, இலங்கை அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றிபெறுவதற்காக, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,200 அடி உயரத்தில் அமைந்துள்ள, நுவரெலியாவின் ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 4200 அடி உயரத்தில் இருக்கும் ரதெல்ல கிரிக்கெட் மைதானம்!

1856ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் புனரமைக்கப்பட்டு, தற்போது தேசிய அணியினர் பயிற்சி பெறுவதற்கு தயாராக உள்ளதாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தேசிய மட்ட கிரிக்கெட் பயிற்சிக்காக பயன்படுத்தக்கூடிய ஒரே உயரமான கிரிக்கெட் மைதானம் இதுவென SLC மேலும் தெரிவித்துள்ளது.

மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, SLC இன் சர்வதேச இடங்கள் மற்றும் வசதிகள் மேலாளரான காட்ஃப்ரே டப்ரேரா தலைமையில், மிகவும் அனுபவம் வாய்ந்த 20 பேர் கொண்ட மைதான நிர்வாகக் குழு, மேலும் சில வாரங்கள் முயற்சியை மேற்கொண்டு தேசிய அணிப் பயிற்சிக்கு ஏற்றதாக மாற்றியமைத்து வேலை செய்துள்ளது.

4 கடினமான பிட்ச்களில் பயிற்சியை மேற்கொள்ளும் இலங்கை!

மைதானத்தில் நான்கு சென்டர் டர்ஃப் விக்கெட்டுகள் மற்றும் புதிதாக போடப்பட்ட ஐந்து பயிற்சி டர்ஃப் விக்கெட்டுகள் உள்ளன, மேலும் குறிப்பிட்ட மற்ற சில வசதிகளும் உள்ளன. அணி அதிக சிரமமின்றி பயிற்சிகளை மேற்கொள்ள இது பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.

இலங்கை அணி பிப்ரவரி 16 ஆம் திகதி ரதெல்லாவுக்குச் சென்றுள்ள நிலையில், நியூசிலாந்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் அங்கு ஒரு வார காலம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

நியூசிலாந்தின் கால நிலையை ஒத்துள்ள, ராதெல்லா பகுதி!

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் உள்ள இலங்கை அணிக்கு, நியூசிலாந்தின் வரவிருக்கும் சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்தின் காலநிலையும், ரதெல்ல பகுதியின் காலநிலையும் ஒரே மாதிரியானவை எனப்படுவதால், இலங்கை கிரிக்கட் அணிக்கு இந்த பயிற்சி முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகின்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இலங்கைக்கு இருக்கும் வாய்ப்பு!

இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு, தற்போது பிரகாசமாகவே இருக்கிறது. ஒருவேளை இந்தியா 4-0 என ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால், அதற்கு பிறகான நியூசிலாந்து தொடரை 2-0 என இலங்கை அணி வென்றால், இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

ஒருவேளை இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-1, 3-0 என வென்றாலும் புள்ளி வித்தியாசங்களை சரிசெய்யும் இலக்கு, இலங்கை அணிக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கெல்லாம் இலங்கை அணி, முதலில் நியூசிலாந்தை 2-0 என வெற்றிபெற வேண்டும். அதற்கான தீவிர பயிற்சியில் தற்போது இறங்கியுள்ளது இலங்கை.