கம்பீர், சாம்சன், அசலங்கா pt web
விளையாட்டு

பயிற்சியாளராக கம்பீர் .. இலங்கைக்கும் புதிய கேப்டன்.. ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் IND vs SL T20I

இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இலங்கை அணிக்கும் புதிய கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.

Angeshwar G

இந்தியா vs இலங்கை 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற பின் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டி20 போட்டிகளுக்கு ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் கேப்டனானார். பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகிர் கான் அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலாஜி பொறுபேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கம்பீரின் வலுவான ஆதரவுடன் தென்னாப்ரிக்காவின் மோர்னே மோர்கல் பொறுப்பேற்க உள்ளார். துணை பயிற்சியாளராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏகப்பட்ட மாற்றங்களுக்கு தயாராகியுள்ளது இந்திய அணி.

கவுதம் கம்பீர்

இந்திய அணி உலகக்கோப்பை வென்ற கையுடன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி தொடங்கும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய இளம் அணி ஏற்கனவே இலங்கை சென்றுவிட்டது. புதிய பயிற்சியாளராக கம்பீர், புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் இந்த டி20 தொடர் பெற்றுள்ளது.

களத்தில் கம்பீர்

இரு அணிகளும் விளையாடும் முதல் டி20 போட்டி ஜூலை 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது டி20 ஜூலை 28 ஆம் தேதியும், மூன்றாவது டி20 30 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இரு அணிகளும் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதியும், அடுத்த இரு போட்டிகள் முறையே, ஆகஸ்ட் 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில்தான், கம்பீர் பயிற்சியாளராக களத்திற்குள் சென்ற காணொளியை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அந்தக் காணொளியில் இந்திய அணியின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதும், அணி வீரர்களுடனான, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவின் உரையாடல்களும், அணியின் ஆலோசனைகளும் காட்சிகளாக உள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் ஆலோசனை வழங்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் போலவே இலங்கை அணியிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இலங்கை அணி நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் சோபிக்காததன் காரணமாக, உலகக்கோப்பை தொடரின்போது கேப்டனாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அசலங்கா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேப்டனாக அசலங்கா

அசலங்கா வங்கதேசத்துடனான டி20 தொடரின்போது 2 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டவர் என்பதும், இலங்கை ப்ரீமியர் தொடர்களில் யாழ்ப்பாண அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தினேஷ் சண்டிமாலும் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிவர் என்பது குறிப்பிடத்தக்கது.