விளையாட்டு

மீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்

rajakannan

நெதர்லாந்து அணி உடனான காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்தியா அணி வெளியேறியுள்ளது.

14-வது உலகக் கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது. லீக் சுற்றில் தோல்விகளை சந்திக்காமல் எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்திய அணி அசத்தி இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் இந்திய அணியின் அகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்திய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்த 4 நிமிடங்களில் அதாவது ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரிங்க்மேன் கோல் அடித்தார். இதனால், 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. இதனையடுத்து, முதல் பாதியில் மீதமுள்ள 20 நிமிடங்களில் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. 

இரண்டாவது பாதியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றனர். சுமார் அரைமணி நேரத்திற்கு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன்பிறகு, இந்திய வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆனால், கிடைத்த பெனால்டி வாய்ப்புகளையும் கோட்டைவிட்டனர். 

இறுதியில், இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அதோடு, உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்தும் இந்திய அணி வெளியேறியது.

1975 ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்று இருந்தது. 43 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.