டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை, காமன்வெல்த் போட்டியில் மிஸ் செய்வதாக பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தெரிவித்துள்ளார்.
ஈட்டி எறிதலில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை தனதாக்கிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. கடந்த மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 88.13 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவுக்கு ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்தார். ஆனால் அவர் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் பங்கேற்கவில்லை. இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் களத்தில் நீரஜ் சோப்ராவை மிஸ் செய்வதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “நீரஜ் பாய் என் சகோதரர். நான் அவரை இங்கே மிஸ் செய்கிறேன். கடவுள் அவருக்கு சிறந்த ஆரோக்கியத்தைத் தரட்டும். நான் அவருடன் விரைவில் களத்தில் போட்டியிடுவேன். அவர் ஒரு நல்ல மனிதர். ஆரம்பத்தில் அவர் சற்று ரிசர்வ் ஆக விலகி இருந்தார். பின்னர் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளும்போது, மனம் திறந்து பேசத் துவங்கினார்.
எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவர் இந்தியாவுக்காகவும், நான் எனது நாட்டிற்காகவும் தொடர்ந்து விளையாடுவோம் என நம்புகிறேன். நாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல பழகி வருகிறோம்” என்று கூறினார் அர்ஷத். 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றது முதல் நீரஜ் சோப்ராவும் அஷ்ரத் நதீமும் பல போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.