நீரஜ் சோப்ரா முகநூல்
விளையாட்டு

மீண்டும் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்ற நீரஜ் சோப்ரா... மற்றொரு சிறப்பான ஆட்டத்தை தந்து அசத்தல்!

2024 ஆம் ஆண்டுக்கான "டயமண்ட் லீக்" ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஸ்விட்சர்லாந்தில் உள்ள லாசேனில் ‘டைமண்ட் லீக்’ தடகள போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்றார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

ஈட்டி எறிதல் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு வீரருக்கும் மொத்தம் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் அவர் வீசும் சிறப்பான தூரம் தேர்வு செய்யப்படும்.

அதன்படி, நீரஜ் சோப்ரா நேற்று

  • முதல் முயற்சியில் 82.10மீ,

  • இரண்டாவது முயற்சியில் 83.21 மீ,

  • மூன்றாவது முயற்சியில் 83.13மீ,

  • நான்காவது முயற்சியில் 82.34 மீ,

  • ஐந்தாவது முயற்சியில் 85.58மீ,

  • ஆறாவது முயற்சியில் 89.49மீ

என்ற தூரத்தில் ஈட்டியை எறிந்தார்.

இந்நிலையில், இதிலிருந்து சிறந்த ஈட்டி எறிந்த தூரமாக, 6 ஆவது வாய்ப்பில் வீசப்பட்ட 89.49மீ எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதேபோல மற்ற நாட்டின் வீரர்களும் தங்களின் சிறப்பான ஆட்டத்தினை வழங்கினர். அவர்களில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற கிரனாடாவின் ஆண்டர்சன், இப்போட்டியில், 90.61 மீ தூரம் எறிந்து தங்கத்தை தட்டிச் செல்லவே, 89.49மீ தூரத்தில் வீசிய நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வெப்பர் 87.08மீ தூராத்தில் ஈட்டியை எறிந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

டோக்கியோவில் தங்கப்பதக்கம், பாரிஸில் வெள்ளப்பதக்கம் என தொடர்ந்து அடுத்தடுத்த பதக்கங்களை வாங்கி குவித்து வந்த நீரஜ் சோப்ரா இப்போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக வெள்ளப்பதக்கமே கிடைத்துள்ளது.

நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் வரலாற்றில், பாரிஸ் ஒலிம்பிக்கில் 89.45மீ தூரம் எறிந்ததுதான் அவரது சிறந்த சாதனையாக இருந்தது. இந்த வகையில், தற்போது அவர் எறிந்திருக்கும் 89.49மீ தூரம், இரண்டாவது சாதனை தூரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.