விளையாட்டு

தங்கப் பதக்கம் மீதான தாகம் இன்னும் தொடர்கிறது - வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா பேட்டி

ஜா. ஜாக்சன் சிங்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும், ரோஹித் யாதவும் இடம்பெற்றிருந்தனர்.

இன்றைய ஆட்டத்தின் போது, நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார் நீரஜ் சோப்ரா.இதையடுத்து, அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. முதலிடத்தை கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டெர்சன் ஆன்டர்சன் பீட்டர்ஸ் தட்டிச் சென்றார். அவர் 90.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்தார். ஆனால், இந்த முறை அதை விட அதிக தூரத்தில் ஈட்டி எறிந்த போதிலும் அவருக்கு இரண்டாவது இடமே கிடைத்திருக்கிறது.

நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றியின் மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றிருக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கல பதக்கம் வென்றார். இதுவே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் மற்றும் கடைசி பதக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலிருந்து ஆன்லைன் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ரா இன்றைய போட்டியின் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாகவும், தங்கப் பதக்கத்தின் மீதான தாகம் தொடர்வதாகவும் கூறினார். “அமெரிக்காவில் சீதோஷ்ண நிலை சாதகமாக இல்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. நன்றாக விளையாடுவேன் என எனக்கு நம்பிக்கை இருந்தது. போட்டியின் முடிவு எனக்கு திருப்தியளித்தது. நமது நாட்டுக்காக பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. இருப்பினும் தங்கப் பதக்கத்தின் மீதான தாகம் இன்னும் தொடர்கிறது” என்றார் நீரஜ் சோப்ரா.

பிரதமர், முதல்வர் வாழ்த்து

இந்நிலையில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "எங்கள் புகழ்பெற்ற விளையாட்டு வீரரால் ஒரு பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். இந்திய விளையாட்டிற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த தருணம்; நீரஜ் சோப்ராவின் எதிர்கால சாதனைகளுக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். உலக அரங்கில் நீரஜ் சோப்ராவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது. நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.