விளையாட்டு

தினேஷ் கார்த்தி அதிரடியால் கோப்பையை வென்றது இந்தியா!

webteam

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்கள் தமிம் 15 மற்றும் லிடான் தாஸ் 11 ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த சபீர் ரஹ்மான் பொறுப்புடன் விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்தவர்களில் முகமதுல்லா 21 மற்றும் மெஹிதி ஹாசன் 19 ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சஹால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெயதேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் 10(7) ரன்களில் வெளியேற, நிலைத்து விளையாடிய கேப்டன் ரோகித் ஷர்மா அரை சதம் (56) எடுத்து அவுட் ஆகினார். இதற்கிடையே வந்த ரெய்னா 3 பந்துகளில் 0 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்து இந்திய ரசிகர்களை ஏமாற்றினார். பின்னர் வந்த லோகேஷ் ராகுல் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை எட்டியது. மணிஷ் பாண்டே 27 பந்துகளில் 28 ரன்களும், விஜய் சங்கர் 19 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த  தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வென்றது. இதனால் வெற்றி அடைந்து பாம்பு ஆட்டத்தை போட நினைத்த பங்களாதேஷ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.