அசாம் மாநிலம் கௌஹாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய வீரருக்கு பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அசாம் மாநிலம் கௌஹாத்தில் 37-வது தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, அசாம், உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்ற திண்டுக்கல் சீலப்பாடி கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் - சுகன்யா தம்பதியரின் மகன் ஜித்தின் ஹெப்டத்லான் போட்டியில் முதலிடம் பிடித்தார். அதேபோல் லாங் ஜம்ப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.
இதையடுத்து ஹெப்டத்லான் போட்டியில் முதலிடம் பெற்ற அவருக்கு தங்கப் பதக்கத்துடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும், லாங் ஜம்ப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்காக வெள்ளிப் பதக்கத்துடன் ரூ.1.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் திரும்பிய தடகள வீரர் ஜித்தினை, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சக வீரர், வீராங்கனைகள், பட்டுமணி வெட்ரன்ஸ் கால்பந்து கழக உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மாலை அணிவிததும் பூங்கொத்துகள் கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.