விளையாட்டு

கிரிக்கெட்டில் கலக்கும் மகன்... ஆரவாரமில்லாமல் சில்லி சிக்கன் கடை நடத்தும் நடராஜன் தாயார்

கிரிக்கெட்டில் கலக்கும் மகன்... ஆரவாரமில்லாமல் சில்லி சிக்கன் கடை நடத்தும் நடராஜன் தாயார்

kaleelrahman

கிரிக்கெட் உலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடராஜன். ஆனால் இவரது தாயார் இன்னும் சில்லி சிக்கன் கடை நடத்தி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனது மகன் கிரிக்கெட்டில் ஜொலித்துவரும் இந்த நேரத்தில் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் பரபரப்பான மாலை வேளையில் விறு விறுப்பாக சில்லி சிக்கன் கடையை நடத்தி வருகிறார் நடராஜனின் தாயார் சாந்தா. ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டில் கலக்கிய நடராஜனின் ஆட்டத்தை டிவியில் கண்டுகளிக்து உற்சாகமடையும் சாந்தா தனது சின்னப்பம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

மகன் பெரிய அளவில் சாதித்து சம்பாதித்தாலும் தன்னால் முடிந்தவரை சிக்கன் கடையை நடத்துவேன் என்று கூறும் சாந்தா, பழச மறக்க கூடாதுல்ல அப்பயெல்லாம் இதுதான நம்மள காப்பத்துச்சு, ஐபிஎல் விளையாடுறப்பவே என்னைய சிக்கன் கடை போடவேணாம்னுதான் சொல்லுச்சு ஆனா நான்தான் கேக்கல. இன்னமும் வாக்குவாதம் நடந்துக்கிட்டுதான் இருக்குது போடாத போடாதேன்னு.

ரெண்டுமணி நேரம்தான பொழுதன்னைக்கும் வீட்ல இருந்தாலும் நம்ம இப்படி வந்து நாலு சனங்கள பாத்தா நல்லா இருக்கும் உடம்பும் நல்லா இருக்கும். நெறையா புள்ளைங்க நீ பழைய கடைய உடாதக்கா நாங்க எங்க போவோம் இன்னும் கொஞ்ச நாளைக்கி போடுங்கக்கா உங்களுக்கு என்னா வயசா ஆகிப்போச்சுன்னு சொல்றாங்க அதனால பொண்ணுகள கல்யாணம் பண்ணி கொடுக்குற வரைக்கும் போடலாம் அதுக்கப்புறமா நிறுத்திப் போடலாம்.

கிரிக்கெட் உலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நடராஜன் மைதானத்தில் எப்போதும் சாந்தமாகவே காணப்படுவது போல்; அவரது தாயார் சாந்தாவும் எளிமையாக எளிமையாக இருப்பது வியப்பளிக்கிறது.