விளையாட்டு

நெருங்கும் ஒலிம்பியாட் தொடர்.. செஸ் போர்டாக மாறிய நேப்பியர் பாலம்!

நெருங்கும் ஒலிம்பியாட் தொடர்.. செஸ் போர்டாக மாறிய நேப்பியர் பாலம்!

ச. முத்துகிருஷ்ணன்

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் முதன்முறையாக நடைபெற இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்று வெளியாகி உள்ளது அரசு. பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த விளம்பர படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தோன்றி உள்ளார். இந்த விளம்பர படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்க தரையில் சதுரங்க காய்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருவதைபோன்றும், கருப்பு வெள்ளை நிற ஆடையணிந்தவர்கள் நடனமாடுவதை போன்றும் இது படமாக்கபட்டு உள்ளது.

இதற்காக நேப்பியர் பாலம் சதுரங்கப் பலகையைப் போல கருப்பு - வெள்ளை வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. நேப்பியர் பாலத்தின் இந்த புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.