டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது இனவெறி காரணமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் பெயர் எழுதப்பட்ட மாஸ்க் அணிந்து அரங்கத்துக்குள் நுழைந்தது பெரும் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற ஒரு காவல் அதிகாரியின் மனதுக்கும் கேட்கவில்லை. உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இது உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் சுடப்பட்டார். இனவெறுப்பின் காரணமாக நடைபெறும் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சின்சினாட்டி தொடரின் அரையிறுதியில் இருந்து டென்னிஸ் வீராங்கனை ஒசாக்கா வெளியேறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர் முதலில் நான் ஒரு கருப்பினத்தவர், அதற்குப் பின்னரே விளையாட்டு வீராங்கனை. என்னுடைய ஆட்டத்தை விட ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட அநீதிக்கு, நீதிப்போராட்டத்தின் மீது அதிக கவனம் தேவை எனக் கூறினார். இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்காக அரங்கத்தில் நுழைந்த ஒசாகா, ஜார்ஜ் பிளாயட் என எழுதப்பட்ட மாஸ்க்குடன் வந்தார். போட்டியின்போது மாஸ்க் அணிந்திருந்த ஒசாகா இனவெறியால் உயிரிழந்த அனைவரின் பெயரையும் தன்னுடைய ஒவ்வொரு மாஸ்க்கிலும் குறிப்பிட்டிருந்தார். இது கருப்பினத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறைமுகமான கண்டனம் எனத் தெரிவித்துள்ளார் ஒசாகா.