விளையாட்டு

“பதக்கங்களை குவிப்பதே இலக்கு”- வாள்சண்டை நிலா சபதம்

“பதக்கங்களை குவிப்பதே இலக்கு”- வாள்சண்டை நிலா சபதம்

webteam

காமன்வெல்த் சர்வதேச போட்டிகளில் அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைப்பதே தனது இலக்கு என காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற நாமக்கல் மாணவி நிலா கூறியுள்ளார். 

லண்டனில் காமன்வெல்த் நாடுகளுக்கான போட்டிகள் கடந்த 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் வாள் சண்டை போட்டியில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 8 நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் 4 பேர் பங்கேற்றனர். அதில் நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயிலும் நிலா என்ற மாணவியும் பங்கேற்று விளையாடினார்.

அதில் அவர் இந்தியாவின் சார்பில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்று தாயகம் திரும்பி இன்று கல்லூரிக்கு வருகை தந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேலும் மாணவிக்கு கல்லூரி முதல்வர் பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளும் நிலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பதக்கம் வென்ற வீராங்கனை நிலா புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சாதரண குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் சர்வதேச  போட்டியில் கலந்துக் கொண்டு பதக்கம் வென்றது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்க பதக்க வாய்ப்பை இழந்தாலும், வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும் நாட்களில் தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து சாதனை படைப்பதே தனக்கு இலக்கு என தெரிவித்துள்ளார்.