விளையாட்டு

நண்பர் செய்த நம்பிக்கை துரோகம்... கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் சொத்தை அபகரித்த மேலாளர்!

நண்பர் செய்த நம்பிக்கை துரோகம்... கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் சொத்தை அபகரித்த மேலாளர்!

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் அளித்த புகாரின் பேரில் அவரது மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், நண்பரான சைலேஷ் தாக்கரேவை தன்னுடைய மேலாளராக நியமித்தார். உமேஷ் யாதவின் வங்கிக் கணக்கு, வருமான வரி மற்றும் நிதிசாா் செயல்பாடுகளை சைலேஷ் தாக்கரே கவனித்து வந்தாா். இந்த நிலையில், நாக்பூரில் மனை வாங்க விரும்பிய உமேஷ் யாதவ், அதுகுறித்து சைலேஷிடம் தெரிவித்துள்ளார். பின்னர், மனை குறித்து உமேஷிடம் தெரிவித்த பின்பு, அதை வாங்குவதற்காக ரூ.44 லட்சம் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, சைலேஷின் வங்கிக் கணக்கில் ரூ.44 லட்சத்தை உமேஷ் யாதவ் டெபாசிட் செய்துள்ளாா். குறிப்பிட்ட நிலத்தைத் தனது பெயரில் வாங்கிய சைலேஷ் தாக்கரே, இதுகுறித்து உமேஷ் யாதவிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உமேஷ் யாதவ், நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றும்படி சைலேஷிடம் கேட்டுள்ளாா். அதற்கு ஒப்புக்கொள்ளாததுடன், பணத்தை திரும்ப ஒப்படைக்கவும் சைலேஷ் மறுத்துவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக கொரடி காவல் நிலையத்தில் உமேஷ் யாதவ் புகாரளித்தாா். நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் மற்றும் சொத்தை முறைகேடாக இணைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சைலேஷ் தாக்கரே மீது போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

- ஜெ.பிரகாஷ்