விளையாட்டு

ஆப்கன் அகதி முதல் கால்பந்து 'ஸ்டார்' வரை... நாடியா நதீம் பயணமும் போராட்டமும்!

ஆப்கன் அகதி முதல் கால்பந்து 'ஸ்டார்' வரை... நாடியா நதீம் பயணமும் போராட்டமும்!

நிவேதா ஜெகராஜா

நாடியா நதீம் என்ற 33 வயதான பெண்தான் இரண்டு நாள்களாக இன்டர்நெட் சென்சேஷனாக இருந்து வருகிறார். கால்பந்து நட்சத்திரமாக வலம் வரும் இவரது வியத்தகு பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

டென்மார்க் எனப்படும் டேனிஷ் நாட்டின் தேசிய அணியின் பிரபல கால்பந்து வீராங்கனைதான் நாடியா. இவரை நெட்டிசன்கள் கொண்டாட காரணம், அவரின் பின்னணியே. டேனிஷ் கால்பந்து அணியின் பிரதான வீராங்கனையாக இன்று மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு பிரபலமாக வலம்வரும் நாடியாவின் பின்னணி, அத்தனை சோகங்கள் நிறைந்தது. டென்மார்க் அணிக்காக விளையாடினாலும், டென்மார்க் இவரின் பூர்விக நாடு கிடையாது.

எப்போதும் போர் மேகங்களும், துப்பாக்கி குண்டுகள் முழங்கும் ஆப்கானிஸ்தான் நாடுதான் நாடியாவின் பூர்விகம். இங்கு உள்ள ஹெராட் நகரில்தான் ஜனவரி 2, 1988 அன்று பிறந்தார். இவரின் தந்தை ஆப்கானிய ராணுவத்தில் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார். நாடியா 11 வயதாக இருந்தபோது தலிபான் தாக்குதலில் கொல்லப்பட்டார் அவரின் தந்தை. அதன்பிறகு நிர்கதியானது நாடியாவின் குடும்பம். போதாக்குறைக்கு தலிபான்கள் உடனான மோதல் போக்கால் ஆப்கான் நிம்மதியை தொலைத்திருக்க, உயிர் பிழைக்க சொந்த நாடை காலி செய்திருக்கிறது நாடியாவின் குடும்பம்.

ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்வதுதான் அவர்களின் எண்ணம். அதற்காக, ஆப்கானில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் நாடியாவின் தாய் மற்றும் நான்கு சகோதரிகளும் தஞ்சம் புகுந்த இடம் பாகிஸ்தான். லண்டனில் நாடியாவின் உறவினர்கள் சிலர் இருந்ததால் அங்கு செல்ல நினைத்துள்ளனர். லண்டன் செல்வதற்கு பாகிஸ்தான் வழியாக இத்தாலி பயணம் ஆகியுள்ளனர். அங்கிருந்து ஒரு ட்ரெக்கில் லண்டன் பயணமாகியுள்ளனர். மொத்தக் குடும்பமும் லண்டன் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் சென்ற ட்ரக் ஒரு இடத்தில் அவர்களை இறக்கிவிட்டுள்ளது. எங்கும் பார்த்தாலும் மரங்களாக இருந்த அந்த இடம் குறித்து வழிப்போக்கர் ஒருவரிடம் கேட்டபோதுதான் அது டென்மார்க் என்பது தெரியவந்துள்ளது.

இப்படி அகதியாக சென்ற நாடியாவுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இப்போது டென்மார்க் நாடே தாயகமாக மாறியிருக்கிறது. அகதியாக அங்கு வளர்ந்தபோது தான் B52 ஆல்போர்க் கிளப்பில் இணைந்து கால்பந்து விளையாட தொடங்கியிருக்கிறார் நாடியா. இதில் அவர் காட்டிய பெர்பார்மென்ஸ், டென்மார்க் தேசிய அணிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளது. 2009-ஆம் ஆண்டில் நடந்த ஆல்கார்வ் கோப்பை தொடரின்போதுதான், நாடியா முதல் முறையாக டேனிஷ் தேசிய அணிக்காக அறிமுகமானார்.

இன்றைய தினத்தில், டேனிஷ் அணியின் சிறந்த கோல் அடிக்கும் வீரர் என்ற பெயர் பெற்றவர் நாடியா. 2017 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அவர் அடித்த கோல் அந்த தொடரில் ஹைலைட்டாக அமைந்து அவருக்கு பெரிய அளவிலான புகழை சேர்த்தது.

சில மாதங்கள் முன் நடந்த பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைனுடன் பிரெஞ்சு லீக் பட்டத்தை வென்ற பிறகு நாடியாவின் கிராப் புகழின் உச்சத்தை தொட்டுள்ளது. கால்பந்து வீரர் என்பதை தாண்டி நாடியா ஒரு மருத்துவரும்கூட. ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவியாக அறுவை சிகிச்சை நிபுணர் மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார் நாடியா. கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மருத்துவராக தொடர இருப்பதாக அவர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

இப்படி நாடியாவின் குழந்தைப் பருவம் அதிர்ச்சிதரக்கூடிய கதைகளால் நிரம்பியது. இவரின் வாழ்க்கை கதை ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது மீண்டும் இன்டர்நெட் சென்சேஷனாக ஆனதற்கு காரணம், இரண்டு நாள்கள் முன்பு ஒரு ட்விட்டர் பயனர் நாடியாவின் உணர்ச்சிமிகு கதையை பதிவிட, அந்த ட்வீட் வெளியிடப்பட்ட சில மணித்துளிகளில் வைரலாகி, 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது.

இதையடுத்து நாடியாவை பாராட்டி பலரும் பதிவுகளை இடத் தொடங்கினர். ''அனைவரின் மனதிலும் நான் அதிகமாக இருக்கிறேன். இவை அனைத்துக்கும் நன்றி. உங்கள் செயல் என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது" என்று நெட்டிசன்கள் வெளிப்படுத்திய அன்புக்கு நாடியா நன்றி தெரிவித்துள்ளார்.

- மலையரசு