எனக்கான நேரம் கண்டிப்பாக வரும் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடுபவர் சுரேஷ் ரெய்னா. சமீபகாலமாக இந்திய ஒரு நாள் அணியில் அவர் இடம் பெறவில்லை. இலங்கையில் நடக்கும் தொடரில் அவருக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்கவில்லை. இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பிடித்துள்ளதால் அவர் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் புச்சிபாபு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடுவதற்காக சென்னை வந்துள்ள சுரேஷ் ரெய்னா கூறியதாவது:
இந்திய அணிக்கு நான் தேர்வு செய்யப்படாததால் எனக்கு வருத்தம் இல்லை. ஏமாற்றமும் இல்லை. எனக்கான நேரம் வரும். அதற்காக என்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறேன். கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அதை நினைக்கவும் இல்லை. கடுமையான உழைப்பு மற்றும் பயிற்சியில்தான் இப்போது என் முழு கவனமும் இருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளை பேசிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை. இப்போது என்ன செய்கிறோம் என்பது முக்கியம். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறேன். அதை சரிபடுத்துவதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. இப்போது எனக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியம். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் மீண்டும் இடம்பெற்று தோனி தலைமையின் கீழ் ஆடவேண்டும் என்கிற ஆவலிலும் இருக்கிறேன்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார்.
ரெய்னா கடைசியாக, 2015-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார்.