ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனுக்கு நான் கொடுத்த பதிலடியை, எனது அம்மாவும் சகோதரியும் ரசித்தார்கள் என்று விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் சொன்னார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பன்ட். சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப், ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தத் தொடரின் போது, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெய்ன், ”ஒரு நாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார். நாம் இவரை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (பிக்பாஷ் அணி) க்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மேன் தேவை. ஹோபர்ட் அழகான சிட்டி. அங்கு இவருக்கு நல்ல அபார்ட்மென்ட்டை அளிக்கலாம். நான் என் மனைவியை சினிமாவுக் கு அழைத்துச் சென்றால் என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார்.
அடுத்து இந்தியா பீல்டிங் செய்யும்போது, ரிஷாப் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். ‘’நமக்கு இன்று சிறப்பு விருந்தினர் கிடைத்திருக்கிறார். மயங்க், நீங்கள் எப்பவாது தற்காலி கேப்டன்’ என்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா? பெய்னுக்கு பேசுவது மட்டுத்தான் பிடிக்கும். பேச்சு பேச்சு பேச்சுதான். அவரை அவுட் ஆக்க எதுவும் செய்ய வேண்டாம்’’ என்றார்.
இந்த கிண்டல் பற்றி இப்போது ரிஷாப்பிடம் கேட்டபோது, ‘’இதுதான் நான். என்னை யாராவது ஆத்திரப்படுத்தினால், நான் சரியான பதிலடி கொடுப்பேன். என் அணிக்காக நான் செய்ய வேண்டிய கடமை இருந்தது. அதோடு எனக்கான எல்லை எதுவென்று தெரியும். அதை மீற மாட்டேன். இந்த கிண்டலை ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள். எனது அம்மாவும் சகோதரியும் கூட ரசித்தார்கள்’’என்றார்.
மேலும் கூறும்போது, ‘’எம்.எஸ்.தோனியும் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்டும் எனது ஆதர்சம். அதற்காக அவர்களைப் போல நானும் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களிடம் இருந்து காப்பி அடிப்பதாகவும் அர்த்தம் இல்லை. நான் என்னைப் போலவே இருக்க ஆசைப் படுகிறேன். ரிஷாப் பண்ட் ஆக இருக்கவே ஆசை’’ என்றார்.