2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங்குக்கு பதிலாக தோனி முன்னதாக களமிறங்கியது குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன் விளக்கமளித்துள்ளார். அதேபோல், தன்னை அச்சுறுத்திய இரண்டு பேட்ஸ்மேன்கள் குறித்தும் சுவாரஸ்ய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா - இலங்கை அணிகள் இடையே மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி அவுட்டான பின்பு யுவராஜ் சிங்தான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக தோனி களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இமாலய சிக்ஸரை விளாசி உலகக் கோப்பையை இந்தியாவின் வசமாக்கினார். அதனை இப்போது வரை எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.
தோனி இறுதிப் போட்டியில் முன்னதாக ஏன் களமிறங்கினார் என்பது குறித்து "ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ" இணையதளத்தில் பேசியுள்ளார் முரளிதரன். அதில் "நானும் தோனியும் சென்னை அணிக்காக ஐபிஎல்லில் விளையாடி வந்தோம். அப்போது வலைப் பயிற்சியின் போது தோனிக்கு நான் பவுலிங் செய்வேன். ஆனால் யுவராஜ் சிங்குக்கு என்னுடைய சுழற்பந்துவீச்சு எப்படிப்பட்டது என்பது பற்றி தெரியாது. பேட்டிங் வரிசையின்படி யுவராஜ் தான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் என் சுழற்பந்துவீச்சை சமாளிக்கதான் அவருக்கு பதிலாக தோனி களமிறங்கினார் என நினைக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "சச்சின் டெண்டுல்கர் என் சுழற்பந்துவீச்சை சாதாரணமாக கணித்து விளையாடி விடுவார். ஆனால் ராகுல் டிராவிடால் அந்தளவுக்கு கணிக்க முடிந்ததில்லை. மேலும் விவிஎஸ் லட்சுமண் மற்றும் கவுதம் காம்பீரும் என்னுடைய தூஸ்ராவை அற்புதமாக விளையாடுவார்கள்.
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் என்னை அச்சறுத்திய இரண்டு பேட்ஸ்மேன்கள் சேவாக், லாரா. சேவாக் எல்லா நேரங்களிலும் கணித்து விளையாடியவாறு எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் அச்சமின்றி எல்லோருடைய பந்துகளையும் அடித்து விளையாடுவார். 99 ரன்களில் இருந்தால் ஒரு ரன் அடித்து சதம் அடிக்க வேண்டும் என்ற எல்லா வீரர்களும் நினிப்பார்கள். ஆனால் சேவாக் அப்படியல்ல, அந்த நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் விளாச நினைப்பார். அப்படிதான் 293 ரன்கள் எடுத்த போட்டியிலும் 300 ரன்கள் எட்ட வேண்டும் என்பதை மனதில் நினைக்காமல் அடித்து விளையாட முற்பட்டு ஆட்டமிழந்தார். அவர் களத்தில் இரண்டு மணி நேரம் இருந்தால் 150 ரன்கள் விளாசிவிடுவார்கள். ஒருநாள் போட்டியில் அவர் முழுதான் விளையாடினால் அணி நிச்சயம் 300 ரன்கள் கடந்துவிடும்" என்றார் முத்தையா முரளிதரன்.
முரளிதரன் குறிப்பிட்ட 2009 மும்பை போட்டியில் நடந்தது என்ன?
மும்பை மைதானத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தன்னுடைய மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 393 ரன்கள் குவித்தது. திலகரத்னே தில்ஷான் 109, அஞ்சலோ மேத்யூஸ் 99 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய் தொடங்கி தோனி வரை மாஸ் இன்னிங்ஸ் விளையாடினர். இந்திய அணிக்கு மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸாக அது மாறியது. அந்தப் போட்டியில் வீரேந்திர சேவாக் தன்னுடைய அதிரடியால இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 254 பந்துகளை சந்தித்த அவர் 293 ரன்கள் குவித்தார். அதில் 40 பவுண்டரிகளையும், 7 சிக்ஸர்களையும் விளாசி தள்ளினார். முரளி விஜய் 87, டிராவிட் 74, சச்சின் 53, விவிஎஸ் லஷ்மண் 62 ரன்கள் எடுத்த கேப்டனும் விக்கெட் கீப்பருமான் தோனி 154 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அந்தப் போட்டியில் தான் சேவாக் 300 ரன்கள் அடிக்க வாய்ப்பு இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஒரே நாளில் சேவாக் 284 ரன்கள் குவித்து இருந்தால். மூன்றாவது நாள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது டிராவிட் அவருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் தான் 300 அடித்த பின்னர் வேகம் காட்டு என்று சொல்லியிருக்கிறார். ஆனால், சேவாக் அதனைப் பற்றி எல்லாம் கவலை படாமல் வழக்கம் போல் தனது விளையாட்டை விளையாடி ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை முத்தையா முரளிதரன் தான் வீழ்த்தினார். அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் சேவாக் அந்தப் போட்டியில் இந்திய அணி 24 மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அடித்த இரண்டு பெரிய ஸ்கோர் அது.