விளையாட்டு

சச்சின் 200 ரன்களை கடந்த பிறகு முல்தான் டெஸ்டை டிக்ளேர் செய்திருக்கலாம் - யுவராஜ் சிங்!

சச்சின் 200 ரன்களை கடந்த பிறகு முல்தான் டெஸ்டை டிக்ளேர் செய்திருக்கலாம் - யுவராஜ் சிங்!

ச. முத்துகிருஷ்ணன்

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்களில் விளையாடிக் கொண்டிருக்க, அவர் 200 ரன்களை கடந்த பிறகு ஆட்டத்தை டிக்ளேர் செய்திருக்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முல்தான் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வீரேந்திர சேவாக் 309 ரன்களை குவித்ததற்காக இன்றும் நினைவுகூறப்படுகிறது. இந்தப் போட்டியில்தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதே ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அவர் தனது இரட்டை சதத்தை எட்டுவதற்கு 6 ரன்கள் இருந்தபோது, கேப்டன் ராகுல் டிராவிட் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய முடிவு செய்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்திய அணியின் ஸ்கோர் 675/5 என்ற நிலையில் இன்னிங்சை டிக்ளேர் செய்ய ராகுல் டிராவிட் முடிவு செய்திருந்தார். யுவராஜ் சிங் 59 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் உடனடியாக “டிக்ளேர்” அறிவிப்பு வந்தது. முல்தான் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இது பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி வென்ற முதல் டெஸ்ட் தொடர் இது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், டெண்டுல்கர் தனது 200 ரன்களை எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். "நாங்கள் வேகமாக விளையாட வேண்டும் என்று இடையில் எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. டிக்ளேர் செய்யப் போகிறோம் என்று தெரிவித்தார்கள். அவர் அந்த ஆறு ரன்களை மற்றொரு ஓவரில் பெற்றிருக்கலாம். மூன்றாவது அல்லது நான்காவது நாளாக இருந்தால் 150 இல் இருக்கும்போது அவர்கள் டிக்ளேரை அறிவித்திருப்பார்கள். அந்த அறிவிப்பில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. சச்சினின் 200 க்குப் பிறகு அணி அறிவித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.