விளையாட்டு

கேப்டன் கூல் தோனியை கோபமடைய வைத்த முகேஷின் “வைடு” பால்! வைரல் வீடியோ!

கேப்டன் கூல் தோனியை கோபமடைய வைத்த முகேஷின் “வைடு” பால்! வைரல் வீடியோ!

ச. முத்துகிருஷ்ணன்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் முகேஷ் சவுத்ரி வீசிய “வைடு” பாலால் சென்னை கேப்டன் தோனி கோபமடைந்தார்.

எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், போட்டியின் இறுதி ஓவரின் போது வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி மீது கேப்டன் “கூல்” தனது அமைதியை இழந்து கோபப்பட்டார்.

கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு லெக்-சைட் பந்து வீச்சை முகேஷ் வீசினார். அந்த பந்து வைடு பாலாக மாறிப்போனது. அப்போது சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீச்சாளர் முகேஷ் மீது கோபமாக இருப்பதும், ஆஃப்சைடில் அமைக்கப்பட்ட ஃபீல்டர்களை நோக்கிச் செல்வதும் வீடியோவாக வைரலாகி வருகிறது. அவர் ஆஃப் சைடில் வீசியிருந்தால் அது வைடு பாலாக மாறாமல் போயிருக்கும்!

போட்டிக்கு பின் பேசிய தோனி, “நான் எப்பொழுதும் எனது பந்துவீச்சாளர்களிடம் கூறுவேன். நீங்கள் ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்களை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் சேமிக்கும் மீதமுள்ள இரண்டு பந்துகள் முக்கியம். அதிக ஸ்கோரைப் பெறும் ஆட்டத்தில் இறுதியில் அந்த இரண்டு பந்துகள்தான் ஆட்டத்தை வெல்ல உதவும்” என்று கூறினார்.

சென்னை அணி தொடர் தோல்விகளால் துவண்டு வந்த நிலையில், அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டதட்ட மங்கிப் போயியுள்ளது. 8 போட்டிகளில் 6ல் தோல்வியை சந்தித்த நிலையில்தான் ஜடேஜா தனது கேப்டன் பொறுப்பை தோனியிடம் மீண்டும் ஒப்படைத்தார். தோனி மீண்டும் சென்னை அணிக்கு கேப்டன் ஆனதில் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 202 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணியும் கிட்டதட்ட இலக்கை நெருங்கிவிட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் ஆட்டம் சென்னை அணியின் வசம் வந்தது. கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவை என்பதால் சென்னை அணிக்கு வெற்றி நிச்சயம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அதாவது 6 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை முகேஷ் சவுத்ரி வீசினார். முதல் பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விட்டுக் கொடுத்தார். இதனால் சென்னை ரசிகர்கள் சற்றே கலக்கம் அடைந்தனர். மூன்றாவது பந்தை டாட் பாலாக அவர் வீசியதால் சற்றே நிம்மதி ஏற்பட்டது. ஆனால், அடுத்த பந்தில் ஓய்டு வீசினார். இந்த நேரத்தில் தான் தோனி டென்ஷன் ஆனார். ஒருவேளை நோ பால் வீசி அந்த பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டு விடும்.