விளையாட்டு

என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'

என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'

jagadeesh

உலகின் மிகப்பெரிய மைதானம், பகலிரவு ஆட்டம், பிங்க் நிற பந்து என ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் தொடங்கியது இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி.  மின்னொளியில் 5 நாள்களும் டெஸ்ட் போட்டி நடைபெறும், பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிப்பார்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அந்தி நேரத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பார்கள் என பல்வேறு எதிர்பார்ப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தது ஆனால் இதில் "திருஷ்யம்" படத்தில் வரும் ட்விஸ்டுகளை போல எதிர்பார்த்தது ஒன்று நடந்தது வேறாகவும் இருந்ததுதான் 'ஹைலைட்'.  

முதல் ட்விஸ்டே மைதானத்தின் பெயர் மாற்றம்தான். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற புகழுக்கு சொந்தமான மொடேரா மைதானம் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுதான் அந்த ட்விஸ்ட். போட்டி துவங்கும் வரை இந்தப் பெயர் மாற்றம் குறித்த தகவல் கசியவேயில்லை. மோடியின் கனவுத்திட்டம் இது என்று மைதானத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். இனி போட்டி குறித்து பார்க்கலாம்...

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றாலும், அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. என்னதான் சென்னை முதல் போட்டியில் ரூட்டின் இரட்டைச்சதமும் வெற்றியும் இங்கிலாந்தை மகிழ்வித்தாலும் இரண்டாவது போட்டியை 4 நான்கு நாளில் முடித்தது இந்திய அணி. சென்னையின் பிட்ச் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முன் வைத்தார்கள். அடுத்து அகமதாபாத் டெஸ்ட்டுக்கு முன்பு சற்று காரசாரமாகவே பேசினார் ரோகித் சர்மா.

"என் தங்கம் என் உரிமை" என விளம்பரங்களில் வருவதுபோல "எங்கள் பிட்ச் எங்கள் உரிமை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும். வெளிநாடுகளில் எங்களுக்கு ஏற்றார் போல பிட்ச் அமைப்பதில்லை. அவர்களுக்கு மட்டும் நாங்கள் ஏன் அப்படி செய்ய வேண்டும். பிட்ச் குறித்து விவாதிப்பதை விட்டுவிட்டு வீரர்களின் திறனை பாருங்கள்" என்றார் ரோகித் சர்மா. ஆனால் ரோகித் சர்மா சொன்னதைவிடவும் படு பயங்கரமாகவே இருந்தது அகமதாபாத் பிட்ச்.

போட்டி நடைபெறும் நாட்டுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கலாம் என்பதில் தவறில்லைதான். ஆனால் அகமதாபாத் பிட்ச் சொந்த நாட்டுக்கே பாதகமாகும் அளவிலேயே இருந்தது என்பதுதான் உண்மை. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்றால் அடுத்து விளையாடிய இந்தியாவும் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சரி இரண்டாவது இன்னிங்ஸிலாவது மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அது இன்னும் மோசமாக சென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தும் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஏதோ விக்கெட் ஹைலைட்ஸ் பார்ப்பது போல் மேட்ச் சென்றது.

பொதுவாக பிங்க் நிற பந்து பகலிரவு ஆட்டங்களில் மாலை நேரத்துக்கு பின்பு வேகப்பந்துவீச்சாளர்களுக்கே அதிக விக்கெட் விழும் என்பது கணிப்பு. ஆனால் இதில் இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

இதன் பின்பு இரு இன்னிங்ஸிலும் அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் கூட்டணியே அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியிலும் அப்படியே. ஆண்டர்சன் போன்ற 'லெஜன்ட்டுகள்' எல்லாம் அகமதாபாத் பிட்ச்சில் டம்மியாகவே இருந்தார்கள். அகமதாபாதில் மொத்தம் 30 விக்கெட்டுகள் சரிந்தது, 28 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினார்கள். அதிலும் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்த பேட்ஸ்மேன்கள்தான் அதிகம். அதாவது பந்து வரும் திசையின் தன்மையை பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியாத வகையில் பிட்ச் இருந்ததுதான் காரணம்.

இது குறித்து விராட் கோலி கூறும்போது "முதல் இன்னிங்ஸில் பிட்ச் நன்றாகதான் இருந்தது. பந்து பேட்டுக்கு நன்றாகவே வந்தது. சுழற்பந்துவீச்சாளர்கள் மிக திறமையாக பந்துவீசினார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இரு அணிகளின் பேட்ஸ்மேன்கள்தான் சரியாக விளையாடவில்லை" என தெரிவித்திருக்கிறார். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் பிட்ச் குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் அலிஸ்டர் குக் மற்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஆனால் அகமதாபாத் பிட்ச் குறித்து கெவின் பீட்டர்சன் குறை சொல்லவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீதுதான் விமர்சனத்தை வைத்துள்ளார். ஆனால் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தகுதி இழப்பு, 3 ஆவது டெஸ்ட்டில் தோல்வி என கடுப்பில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார். அதாவது "பிட்ச் மிகப்பெரிய அவமானம். ஆட்டத்தை நேரில் காண 40,000 ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். ஒரு ஐகானிக் போட்டியை நேரில் காணப்போகிறோம் எனவந்திருந்த அவர்களை ஏமாற்றியது மிகவும் வருத்தப்படவேண்டியது. ஜிம்மி ஆண்டர்சனின் பந்தை விராட் கோலி எப்படி எதிர்கொள்வார், ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துகளை எப்படி பென் ஸ்டோக்ஸ் எதிர்த்து ஆடுவார் எனப் பல கனவுகளோடு மேட்ச் பார்க்கவந்தவர்களை இந்த மைதானம் ஏமாற்றியிருக்கிறது.

"நீங்கள் இஷாந்த் ஷர்மாவின் 100வது டெஸ்ட் போட்டியின் மகிழ்ச்சியையும் கெடுத்துவிட்டீர்கள். ஒரு சில ஓவர்களே அவர் பந்துவீசினார். ரசிகர்கள் திருடப்பட்டுவிட்டதாக நான் உணர்கிறேன். பும்ரா, இஷாந்த், ஆண்டர்சன், பிராட், லீச் என முக்கிய வீரர்களின் பந்துவீச்சையெல்லாம் பார்க்கவந்தவர்கள் என்னுடைய பெளலிங்கைப் பார்க்கவேண்டிய துரதிஷ்ட நிலைக்குத்தள்ளப்பட்டார்கள்" என மனக்குமறுல்களை கொட்டி தீர்த்தயிருக்கிறார் ஜோ ரூட்.

அத்தோடு சமூக வலைதளங்களிலும் நேற்று முழுவதும் பிட்ச் குறித்து மிகப்பெரிய விவாதமே நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய மைதானத்தை தரத்துடன் உருவாக்கவில்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை கொட்டி தீர்த்தனர். 5 நாட்கள் நடைபெற வேண்டிய போட்டி இரண்டு நாட்கள் கூட முழுமையாக நடைபெறவில்லை என்பது எல்லா தரப்பு ரசிகர்களையும் உண்மையில் ஏமாற்றிதான் இருக்கிறது. 71 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டுநாட்களில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்திருக்கிறது. அஸ்வின் 400 விக்கெட், இந்திய அணியின் அபார வெற்றி, ரோகித் சர்மாவின் வின்னிங் சிக்ஸர் என பலவற்றையும் ரசிகர்கள் கொண்டாடவும் தவறவில்லை.

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் அடுத்த டெஸ்ட் போட்டியும் இதே மைதானத்தில்தான் ஆனால் பகல் ஆட்டம், ரெட் பந்துதான். ஆனால் பிட்ச் எப்படி இருக்கும் என்பது போட்டி நடைபெறும் முன்புதான் தெரியும், அதுதான் வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காத்திருக்கும் 'சஸ்பண்ஸ்', அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.