டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி களமிறங்குவார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகக் கோப்பை தொடருக்கு பின்பு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உலகக் கோப்பைக்கு பிறகு சில மாதங்கள் அவர் தனது துணை ராணுவ பிரிவில் பயிற்சி பெற்றார். அதன்பிறகு தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் விரைவில் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தோனி எதிர்காலம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பிராவோ கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“தோனி இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கவில்லை. ஆகவே அவர் நிச்சயமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், களத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களுக்கு தோனி எப்போதுமே முக்கியத்துவம் தருவதில்லை. அதையே அவர் எங்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். களத்திற்கு வெளியே உலா வரும் கருத்துகளை கண்டு அஞ்சாமல் நமது திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.