தோனியால் முன்புபோல போட்டியை முடிக்க முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அண்மையில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்தார். இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தோனி குறித்து அவரது நண்பரும் முன்னாள் வீரருமான ஆர்.பி.சிங் "கிரிக்கெட்.காம்" இணையதளத்துக்கு பேசியுள்ளார். அதில் "டி20 போட்டிகளில் தோனி அசாதாரணமான வீரர். அதனால்தான் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அவர் காத்திருந்தார். ஆனால் கிரிக்கெட்டை மீறி அவரின் வயது உடல் தகுதி ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த 15 மாதங்களில் அவருக்கு இந்தியாவுக்காக விளையட வாய்ப்பும் கிடைக்கவில்லை" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "2019 உலகக் கோப்பை போட்டியில் 4ஆவதாக களமிறங்கி பேட் செய்ய அவர் விருப்பப்பட்டார். ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு கடைநிலையில் இறங்கி விளையாட மட்டுமே வாய்ப்பு கொடுத்தது. அதுவும் அரையிறுதியில் போட்டியில்தான் கிடைத்தது. முன்பு தான் போட்டியை பினிஷ் செய்வதுப் போல தோனியால் அந்தப் போட்டியில் செய்ய முடியவில்லை. அதுவே அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகுமாறு எச்சரித்திருக்க வேண்டும்" என்றார் ஆர்.பி.சிங்.