விளையாட்டு

"தலைசிறந்த ஒருநாள் போட்டிகளின் அணிக்கு தோனி கேப்டன்" - இயான் பிஷப் !

"தலைசிறந்த ஒருநாள் போட்டிகளின் அணிக்கு தோனி கேப்டன்" - இயான் பிஷப் !

jagadeesh

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் கடந்த 10 ஆண்டில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு அணியை உருவாக்கியுள்ளார். அந்த ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

கிரிக்பஸ் இணையதளத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடனான உரையாடலில், தன்னுடைய தலை சிறந்த ஒருநாள் அணியின் விவரங்களை பகிர்ந்துகொண்டார். அதில் பிஷப் லெவனின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் இடம்பெறுகின்றனர். இவர்கள் இருவரும் 2019 உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்தவர்கள். இதற்கடுத்து 3ஆம் நிலை வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் பிஷப். அதற்குக் காரணம் கோலியின் சீரான வேகத்தில் ரன் குவிக்கும் திறனே எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கடுத்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் அதிரடிக்கும் அதே சமயம் நிலையான ஆட்டத்துக்கும் சொந்தக்காரர்கள் என விளக்கமளித்துள்ளார் பிஷப். இதற்கடுத்த படியாக ஆல் ரவுண்டர்களில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். பின்பு விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள பிஷப் அவரை கேப்டனாகவும் அறிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக தோனி இருந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிஷப் கனவு அணியின் பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், லசித் மலிங்கா, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பிஷப் அணியின் ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.