விளையாட்டு

‘அவரிடமிருந்து நாங்க கத்துக்கிட்டது இதுதான்’-தோனி குறித்து ருதுராஜ்-ன் நெகிழ்ச்சி பகிர்வு!

‘அவரிடமிருந்து நாங்க கத்துக்கிட்டது இதுதான்’-தோனி குறித்து ருதுராஜ்-ன் நெகிழ்ச்சி பகிர்வு!

சங்கீதா

ஒரே ஓவரில் மொத்தம் 7 சிக்ஸர்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியதை அட்வைஸ் ஒன்றை ருதுராஜ் கெய்க்வாட் நினைவுக் கூர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பிரபலமான உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில், தற்போது லீக் சுற்றுகள் எல்லாம் முடிவடைந்து காலிறுதி சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் காலிறுதி சுற்றின் ஒரு ஆட்டத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய உத்தரப்பிரதேச அணி, மகாராஷ்டிராவின் அபார பந்து வீச்சினால் 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனும், இந்திய அணி வீரருமான ருதுராஜ் புதிய சாதனைப் படைத்துள்ளார். ஆட்டத்தின் 49-வது ஓவரில் ஸ்பின்னர் சிவா சிங் வீசிய முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார் ருதுராஜ். தொடர்ந்து 5-வது பந்தை சிவா சிங், நோ பாலாக வீசிய போதும் அதனையும் ருதுராஜ், சிக்ஸராக மாற்றினார். அடுத்து, கடைசி இரண்டு பந்திலும் சிக்ஸர் அடித்து, ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் ருதுராஜ்.

முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதல் 5 போட்டிகளில் பெரிதாக சாதிக்காத ருதுராஜ், (0,1,1,16,17,73,0,30,99,28,41,7,53) இந்தத் தொடர் முழுவதுமே 3 அரை சதங்கள் மட்டுமே எடுத்து மொத்தம் 366 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்திருந்தார். இந்த சீசனுக்காக சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட முதல் 4 வீரர்களில் ருதுராஜூம். ஆனால் அதில் பெரிதாக அவர் சோபிக்கவில்லை. இதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் சாதனைப் புரிந்துள்ளார்.

இந்நிலையில், வெற்றியையும், தோல்வியையும் எப்படி சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோனி கூறியது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூட்யூப் சேனலில் அவருடன் ருதுராஜ் பேசியுள்ளார். அதில், “அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தப் பிறகு அனைவரும் 10-15 நிமிடங்களுக்கு சற்று அமைதியாக இருந்தனர். ஆனால் மஹி பாய்... விளக்கக்காட்சியிலிருந்து (Presentation) திரும்பி வந்தப் பிறகு, எங்களிடம், ‘ரிலாக்ஸ் பாய்ஸ், இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்’ என்று ஆறுதல் படுத்துவார்.

மேலும் சில விஷயங்கள் நாம் நினைத்தவாறு நடக்காதபோது நடுநிலையாக இருப்பது எப்படி என்பதை எம்.எஸ். தோனி எனக்குக் கற்றுக் கொடுத்தார். நீங்கள் வெற்றி பெறும் பக்கத்தில் இருந்தாலும், நடுநிலையாக இருப்பது மிகவும் முக்கியம் என்பார்.

ஆட்டத்தில் வெற்றிப்பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும், தோனி அணியின் சூழல் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வார். ஆம், நிச்சயமாக நிறைய ஏமாற்றம் இருந்தது, ஆனால் அவரிடம் எதிர்மறையான விஷயங்கள் இருந்தது இல்லை. பல நேரங்களில் தோல்வியைத் தொடரும் போது, அணிக்குள் பல்வேறு குழுக்கள் உருவாகும். ஆனால் சிஎஸ்கேயில் அப்படி நடக்கவில்லை.

தோனியின் சந்திப்புகள் பொதுவாக மிகவும் குறுகியதாக இருக்கும். தோல்வியடைந்தப் பிறகும், மிக நீண்ட சந்திப்பு என்றால் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் இருக்கும். இரவு நேர சாப்பாடு திட்டம் இருக்கிறது. அதுக்கு எல்லாரும் தயாரா இருங்க என்று மட்டுமே கூறுவார். ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதை அவர் நமக்கு புரிய வைப்பார்” என்று தெரிவித்துள்ளார்.