விளையாட்டு

நாடா? கிரிக்கெட்டா?  - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி?  

நாடா? கிரிக்கெட்டா?  - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி?  

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விலகயிருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.  இந்தக் கூட்டத்தில் முக்கிய விவாதம் இந்திய அணியின் அனுபவ வீரர் தோனியை சார்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்தத் தொடரிலிருந்து விலகி தனது பாராமிலிட்டரி பிரிவுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகியுள்ளார். அவர் தனது பாராமிலிட்டரி படையுடன் 2 மாதங்கள் பணியாற்ற உள்ளார்.

எனினும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை. இரண்டு மாதங்கள் அவர் தனது பாராமிலிட்டரி பிரிவுடன் பணியாற்றுவதற்காகவே இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. தோனியின் முடிவு குறித்து தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக 2011ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2015ஆம் 
ஆண்டு தோனி பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியை மேற்கொண்டது அனைவரையும் கவர்ந்தது. மேலும் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோனி தனது கீப்பிங் கையுறையில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ‘பலிதான்’ என்பதன் முத்திரையை பதித்து உபயோகப்படுத்தி இருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் அடுத்த போட்டிகளில் இந்தச் சின்னம் இல்லாமல் விளையாடினார். இவ்வாறு பல முறை தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய தோனி மீண்டும் பாராமிலிட்டரி பிரிவுடன் பணியாற்றும் முடிவை எடுத்து தனது நாட்டுப் பற்றை மீண்டும் நிரூபிக்க உள்ளார்.