விளையாட்டு

தேசிய மாணவர் படை மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவில் தோனி, ஆனந்த் மஹிந்திரா

தேசிய மாணவர் படை மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவில் தோனி, ஆனந்த் மஹிந்திரா

jagadeesh

தேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெற்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படை ஏப்ரல் 16 ஆம் தேதி 1948 இல் தொடங்கப்பட்டது. இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் கொண்ட பழமையான அமைப்பான இதனை தற்போது இருக்கும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்சிசி அதன் பாடத் திட்டத்தை மதிப்பாய்வு செய்து நுழைவு நிலை வயதை 16 இல் இருந்து 15 வயதாக குறைத்தது. இந்நிலையில் இப்போதைய காலக்கடத்துக்கு ஏற்ப மேலும் பல மாறுதல்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக உயர் மட்டக்குழு ஒன்றை முன்னாள் எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்பு துறை அமைத்தது. இந்தக் குழுவில் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, எம்பி விநய் சஹஸ்ரபுத்தே மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது. இவர்கள் உயர்மட்டக் குழு தலைவருடன் இணைந்து என்சிசியை மறுசீரமைப்பு செய்யும் ஆலோசனைகளை வழங்குவார்கள் என கூறப்படுகிறது.

இந்திய முன்னாள் கேப்டனான தோனிக்கு ராணுவத்தில் ஏற்கெனவே கவுரவ லெஃப்டினென்ட் கர்ணல் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ராணுவத்தின் பாராசூட் பிரிவில் ஒருமாதம் தங்கியிருந்து அவர் பயிற்சி பெற்றதால் தோனி இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.