தோனி இந்திய அணிக்காக விளையாட ஃபிட்டாவும், ரெடியாவும் இருப்பதாக சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும், எந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இந்த ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்தத்திலும் தோனி பெயர் இல்லை. அதனால், தோனி இனிமேல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தோனியின் எதிர்காலம் குறித்து அண்மையில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஐபிஎல் தொடர் வரவுள்ளது. எல்லோருக்கும் இது தெரியும். அவருக்கும் தெரியும், தேர்வாளர்களுக்கும் தெரியும். கேப்டன் விராட் கோலியும் அவரது பேட்டிங்கை காண்பார். எல்லாவற்றையும் விட தோனிக்கே அது தெரியும். எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், அவர்தான் தன்னுடைய ஆடும் திறனை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். அவரைப்பற்றி உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா " தோனி மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வருவார். ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சிகளை தொடங்குவார். இப்போது அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் கிரிக்கெட்டை விட்டு போக வேண்டும் என நினைத்தால் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் தராமல் சென்றுவிடுவார். ஆனால், அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இப்போது ஃபிட்டாக இருக்கிறார், கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகிறார், இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார்" என்றார்.
மேலும் தொடர்ந்த சுரேஷ் ரெய்னா "இந்திய அணிக்கு நிச்சயம் இப்போது தோனி தேவைப்படுவார் என நான் நினைக்கிறேன். ஆனால், எதுவாக இருந்தாலும் இது கோலியின் முடிவு, அவரின் கையில்தான் இருக்கிறது. அவர் இதனை எப்படி கொண்டு செல்வார் என தெரியவில்லை" என்றார் அவர்.