விளையாட்டு

‘தோனி சிறிது உடற்தகுதியை இழந்துவிட்டார்’ – ரோஜர் பின்னி   

‘தோனி சிறிது உடற்தகுதியை இழந்துவிட்டார்’ – ரோஜர் பின்னி   

JustinDurai

எம்.எஸ். தோனி இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டிய நேரமிது என்றும் அவரின் உடற்தகுதி குறைந்து வருவதாகவும், ஒரு காலத்தில் தாக்கம் செலுத்தும் வீரராக இருந்த தோனி இன்று அவ்வாறில்லை என்றும் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணி தேர்வுக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ரோஜர் பின்னி.

1983 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் வெற்றிக்குப் பின் இருந்த முக்கிய வீரர்களில் ஒருவரான ரோஜர் பின்னி, கடந்த இரண்டு ஆண்டுகளில் தோனியை கவனித்ததன் அடிப்படையில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் தோனி இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

பேட்டி ஒன்றில் ரோஜர் பின்னி கூறும்போது, "கடந்த சில சீசன்களில் தோனியை கவனித்தால் அவரது சிறந்த கிரிக்கெட் காலம் கடந்துவிட்டது தெரியவரும். அவர் கொஞ்சம் பிட்னஸ்ஸை இழந்துவிட்டார். மேலும் இளைய வீரர்கள் நிறைய வருகிறார்கள். அவர்களுக்கு வழிவிடுவது குறித்து தோனி சரியான முடிவை எடுப்பார்’’ என்றார்.

தோனி கடைசியாக 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். அதன்பின் எந்த போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிகளில் அவர் சோபித்தால், அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி பங்கேற்கக்கூடும் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

பின்னி மேலும் கூறுகையில், ‘’எம்.எஸ். தோனியை நாங்கள் பாராட்டிய ஒரு விஷயம் என்னவென்றால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர் மிகவும் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து காட்டியவர்.

அவர் களத்தில் இருந்தவர்; அவர் விரும்புவதை நாங்கள் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் அவர் அதைக் கோர மாட்டார். பிசிசிஐ தலைவர் மற்றும் தேர்வாளர்களுடன் தோனி பேசுவார்.  எங்களிடம் எந்த வாதங்களும், சண்டைகளும் இல்லை'' என்கிறார் அவர்.