விளையாட்டு

மனிஷ் பாண்டேவை கோபத்தில் திட்டிய ’மிஸ்டர் கூல்’!

மனிஷ் பாண்டேவை கோபத்தில் திட்டிய ’மிஸ்டர் கூல்’!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, மிஸ்டர் கூல் என்றுதான் கூறுவார்கள். ஆனால், அவரையே கோபப்பட வைத்த சம்பவம் நேற்று நடந்தது. 

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 188 ரன்கள் குவித்தது. இதில் மகேந்திர சிங் தோனியும் மனிஷ் பாண்டேவும் அபாரமாக ஆடினர். பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும் தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அனி, 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 18.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி, பேட்டிங் செய்தபோது இருபதாவது ஓவரில் இரண்டு ரன்கள் எடுக்க நினைத்திருந்தார் தோனி. ஆனால் மனிஷ் பாண்டே கவனிக்காமல் ஒரே ரன்னுடன் நின்றுவிட்டார். இதனால் கோபமான தோனி, ‘ஏய், இங்க பாரு, அங்க என்ன பார்வை. கவனம் இங்க இருக்கட்டும்’ என்று எதிர்முனையில் இருந்து இந்தியில் கத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆடியோவில் சில வார்த்தைகள் சரியாக கேட்கவில்லை என்றாலும் தோனி கெட்டவார்த்தையில் திட்டினார் என்றும் அப்படி பேசுவது அவர் கேரக்டர் இல்லை என்றும் இணையத்தில் பெரும் விவாதம் நடந்துவருகிறது. அதை நிருபிக்க, பேச்சுத் தெளிவாகக் கேட்கும் வீடியோ இருந்தால் அனுப்புங்கப்பா என்று சிலர் கேட்டுள்ளனர். 

நல்லா கேக்கிறாய்ங்கய்யா டீட்டெய்லு!