விளையாட்டு

லக்கி நம்பருடன் பேருந்து ஓட்டுநராக அசத்தும் தோனி - எதற்காக தெரியுமா?

லக்கி நம்பருடன் பேருந்து ஓட்டுநராக அசத்தும் தோனி - எதற்காக தெரியுமா?

சங்கீதா

15-வது ஐபிஎல் சீசன் துவங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், அதற்கான புரோமோஷன் விளம்பரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தோன்றும் புதிய வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26-ம் தேதி துவங்க உள்ளது. இந்த வருடம் அகமதாபாத், லக்னோ என புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 அணிகளும் சேர்த்து 70 சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் நடைபெற உள்ளது. பிளே ஆஃப் சுற்றுகள் குறித்த தகவல்களை இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் முழுமையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாதநிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் முழுமையாக நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், கடந்த 2018, 2019, 2021 என மூன்று ஆண்டுகள் சீன நிறுவனமான விவோ வசமிருந்த ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப், இந்த வருடம் டாடா குழுமத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 என இரண்டு சீசன்களிலும் டாடா டைட்டில் ஸ்பான்சராகி உள்ளது.

இதனால் ‘டாடா ஐபிஎல்’ என புரோமோஷன் செய்வதற்காகவும், ஐபிஎல் நெருங்குவதாலும், ஐபிஎல்லை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை வைத்து, புதிய விளம்பர வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த விளம்பரத்தில் தோனியின் அதிர்ஷ்ட எண்ணான 7 என்ற மோதிரத்தை அணிந்து, பேருந்து ஓட்டுநராக தோனி வரும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், இந்த புதிய சீசனில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.