விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 2 உலக சாதனைகள் படைத்த தோனி!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 2 உலக சாதனைகள் படைத்த தோனி!

webteam

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி இரண்டு உலக சாதனைகளை படைத்தார். 

உலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சவுதம்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சின்போது இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி இரண்டு உலக சாதனைகளை படைத்தார். அதாவது கீப்பராக 600 சர்வதேச இன்னிங்ஸில் செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தப் பட்டியலில் இவருக்கு அடுத்தப்படியாக இருப்பவர்கள் அனைவரும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

கீப்பராக அதிக சர்வதேச இன்னிங்ஸில் விளையாடியவர்கள்

  • தோனி- 600* 
  • பவுச்சர்- 596 
  • சங்ககாரா- 499
  • கில்கிறிஸ்ட்-485

அத்துடன் இந்தப் போட்டியில் மற்றொரு உலக சாதனையையும் படைத்துள்ளார் தோனி. ஆட்டத்தின் 39.3-ஆவது ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் பெலுக்வயோவை சாஹல் பந்துவீச்சில் தோனி ஸ்டெம்பிங் செய்தார். இதன்மூலம் 139 லிஸ்ட் ஏ ஸ்டெம்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் உலகக் கோப்பையில் விக்கட் கீப்பராக அதிக டிஸ்மிஸல் செய்தவர்கள் பட்டியலில் தோனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் நியூசிலாந்தின் மெக்கலத்தின் 32 டிஸ்மிஸலை நேற்று தாண்டினார். 

உலகக் கோப்பையில் அதிக டிஸ்மிஸல் செய்த விக்கட் கீப்பர்கள்

  • சங்ககாரா- 54
  • கில்கிறிஸ்ட்- 52
  • தோனி- 33*
  • மெக்கலம்- 32
  • பவுச்சர்- 31