இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 41ஆவது பிறந்தநாள் இன்று. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவரின் பயணம் மிக நீளமானது.
நீளமான தலைமுடி... மட்டையை சுழற்றி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்... என சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த போதே ரசிகர்களின் நாயகனானார் தோனி. ஆட்டத்தில் அனல் பறந்தாலும் ஆடுகளத்தில் நிதானம் குறையாது நிற்கும் தோனியை கிரிக்கெட் வல்லுநர்களே வியந்து பார்த்தனர். 2005 ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஓருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய தோனி, தனது சிறப்பான ஆட்டத்தால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.
2007ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி.... இதற்கு பெரும் பரிசாக அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். நிதானமாக முடிவுகளை எடுத்து பதற்றமில்லாமல் செயல்படுவதால் கூல் கேப்டன் என்றும் பெயரெடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை தொடர்ந்த தோனி, மற்ற இந்திய கேப்டன்கள் நிகழ்த்தாத பல சாதனைகளை நிகழ்த்தினார். 2009ஆம் ஆண்டு ஐ.சி.சி கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் விருதை அவர் வென்றார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக இந்திய அணியை, தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார் தோனி.
அதிரடியான அணியை நிதானமாக வழிநடத்தி, 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்று கொடுத்து வரலாற்றில் பெயர் பதித்தார். 5 உலகக்கோப்பைகளில் விளையாடிய லிட்டில் மாஸ்டர் சச்சினின் கனவை மெய்ப்படுத்திய பெருமை தோனிக்கே உண்டு. 2013ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம், ஐசிசி நடத்தும் 3 வகையான சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையும் நிகழ்த்தினார் மகேந்திர சிங் தோனி.
ஐபிஎல் போட்டியிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தோனி. அவர் தலைமையில் சிஎஸ்கே அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தோனி ஐபிஎல்-இல் மட்டும் விளையாடி வந்தாலும் கூட அவர் என்றும் ரசிகர்களுக்கு தல தான். அதேபோல இன்று தனது 41-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினாலும்கூட, அவரை இப்போதும் உற்சாகம் குறையாத டீன்-ஏஜ் பையனாகவே பார்க்கிறார்கள் அவர் ரசிகர்கள்!
தனது 41 ஆவது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ தோனி நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஹேப்பி பர்த்டே தல!