விளையாட்டு

தோனியின் 38வது பிறந்த நாள் : சமூக வலைத்தளங்களை அலறவிடும் ரசிகர்கள்...

webteam

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 38வது பிறந்த நாள் இன்றாகும்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் தோனி. நீளமான முடி, கட்டுமஸ்தான உடல் என ஆரம்பத்திலேயே ரசிகர்கள் பலரை கவர்ந்துவிட்டார். அதன்பின்னர் பேட்டிங்கில் அவர் காட்டிய அதிரடி, அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. 

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் இலங்கையிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் ரசிகர்கள் கொந்தளித்து தோனி உள்ளிட்டோரின் வீடுகளில் கற்களை எறிந்தனர். ஆனால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த வெற்றி தோனிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

இதேபோன்று 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது. அதுவும் இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடித்து தோனி அந்த வெற்றியை இந்தியாவிற்கு பெற்றுத்தந்தார். இதன் மூலம் சிறந்த ஃபினிஷர் என்ற பெயரையும் அவர் பெற்றார். இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் சென்னையின் அணியின் கேப்டனான விளையாடி, கோப்பைகளை வென்றதால் அவருக்கு தமிழகத்தில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருந்தது. 

ஒரு கட்டத்தில் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றிகளை வாரிக்குவிக்க துவங்கியது. அவரது கேப்டன்ஷிப் வியூகம் எப்படிபட்ட அணியையும் வீழ்த்தும் சூட்சமத்தை கொண்டிருந்தது. அது தான் இன்றும் அவர் அணியில் இருக்க காரணம். தற்போது அவரை ஓய்வு பெற வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.

ஆனால் ‘என்றுமே தல தோனி’ தான் எனக் கோடிக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதே உண்மை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக வெறித்தனமான ரசிகர்களை கொண்ட ஒரு வீரர் என்றால் அது தோனிதான். 

இந்நிலையில் இன்று தோனியின் 38வது பிறந்த நாள் ஆகும். இதைக் கொண்டாடும் வகையில் சமூக வலைத்தளங்களை தோனியின் ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதிலும் சென்னை ரசிகர்கள் ‘தல தல’ என்று தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே நேற்று தோனி தனது மகள் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.