Dhoni twitter
விளையாட்டு

”இந்த வழி எங்கே இருக்கிறது” - இளைஞர்களிடம் வழிகேட்ட தோனி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Prakash J

இந்திய ரசிகர்களால் ‘கூல் கேப்டன்’ என்றும் சென்னை ரசிகர்களால் ‘தல’ என்றும் செல்லமாய் அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர், இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்ததுடன், பல சாதனைகளையும் படைத்தவர். இவருடைய தலைமைப் பண்பு இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இதையும் படிக்க: கொலம்பியா| பல் பிடுங்கியதால் ரத்தக்கசிவு... சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

M.S.Dhoni

அதிலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கோப்பையை, சென்னை அணிக்காக 5-வது முறையாகப் பெற்றுத் தந்தார். பின்னர் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், கடந்த ஜூலை 7ஆம் தேதி தன்னுடைய 42வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதுகுறித்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பின்னர் தாம் தயாரித்திருந்த ’LGM’ (Lets Get Married) என்ற திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக கடந்த ஜூலை 10ஆம் தேதி சென்னை வந்திருந்தார்.

இந்த நிலையில், அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு சிறுசிறு உடற்பயிற்சிகளுடன் ஓய்வு எடுத்து வரும் தோனி, அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து காரில் ஜாலியாக ஊரையும் சுற்றி வருகிறார். அந்த வகையில், தோனி ராஞ்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு நின்றிருந்த இளைஞர்களிடம், ‘இந்த வழி எங்கே இருக்கிறது’ என்று கேட்ட சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆச்சர்யத்தில் திளைத்த அந்த இளைஞர்களும் தோனிக்கு சரியான வழியைச் சொல்லி அனுப்புகிறார்கள். பின்னர், அந்த இளைஞர்களுக்கு கை கொடுத்த தோனி அவர்களுடன் காரில் இருந்தபடியே போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோதான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: பிலிப்பைன்ஸ்: சோடா வாங்கச் சென்ற சிறுமி... சூட்கேஸில் அடைத்துவைத்து கடத்தல்!

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘தோனி எவ்வளவு சாதாரணமாக நடந்து கொள்கிறார் பாருங்கள்’ எனவும், ’கூகுள் மேப் போன்ற பல தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையிலும் தோனி இன்னும் பழைய காலத்தில் இருக்கிறாரே’ எனவும், ‘இதுதான் தோனியிடம் உள்ள எளிமை’ எனவும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பு சமீபத்தில், தோனி, போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவருக்காக தனது காரை நிறுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.