விளையாட்டு

"கங்குலி கொடுத்த "சப்போர்ட்" தோனி கொடுக்கல"-யுவராஜ் சிங் ஆதங்கம்

"கங்குலி கொடுத்த "சப்போர்ட்" தோனி கொடுக்கல"-யுவராஜ் சிங் ஆதங்கம்

jagadeesh

கங்குலிபோல எனக்கு தோனியும், கோலியும் உறுதுணையாக இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹீரோவாக கருதப்படுபவர் யுவராஜ் சிங். உலகக் கோப்பை தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டும் யுவராஜ் சிங் கவுரவப்படுத்தப்பட்டார். ஆனால் 2011 உலகக் கோப்பைக்கு பின்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் யுவராஜ். இதனையடுத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு குணமாகி, கடுமையான பயிற்சிக்கு பின்பு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியானாலும், யுவராஜ் சிங்குக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார் யுவராஜ் சிங். அண்மையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் யுவராஜ். அதில் "சவுரவ் கங்குலி தலைமையில் விளையாடியது என்னால் மறக்கவே முடியாது. அப்போது அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். கங்குலியிடம் இருந்து அணியின் தலைமை தோனியிடம் சென்றது. யாருடைய தலைமை சிறந்தது கங்குலியா? தோனியா? என கேட்டால் அது சொல்வது மிகவும் சிரமம். ஆனால் சவுரவ் கங்குலி தலைமையில் நிறையப் போட்டிகள் விளையாடியதால், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்" என்றார்.

மேலும் தொடர்ந்த யுவராஜ் சிங் "கங்குலி எனக்கு உறுதுணையாக இருந்ததுபோல தோனியும், கோலியும் இல்லை. இருவரிடமும் சாதகமும் பாதகமும் நிறைய இருக்கிறது" என்றார். கொரோனா வைரஸ் குறித்து பேசிய அவர் "உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் உயிரிழப்பதை காணும்போது இதயம் உடைகிறது. கொரோனா வைரஸ் மிக மிக வேகமாக பரவுகிறது."

மேலும் இது குறித்து பேசிய யுவராஜ் "கொரோனா வைரஸ் குறித்து மக்கள் தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். கொரோனா குறித்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையத்தை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும், தேவையற்ற வதந்திகளையும் அச்சத்தையும் கைவிட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.