விளையாட்டு

தோனியும், ரோகித்தும் அமைதியானவர்கள்.. ஆனால் கோலி ?- மனம்திறந்த பார்த்திவ் படேல் !

தோனியும், ரோகித்தும் அமைதியானவர்கள்.. ஆனால் கோலி ?- மனம்திறந்த பார்த்திவ் படேல் !

jagadeesh

தோனியும், ரோகித் சர்மாவும் வீரர்களின் ஓய்வு அறைகளை அமைதியாக வைத்திருப்பார்கள். ஆனால் கோலி அப்படி வைத்திருக்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் சிறுவயதிலேயே டெஸ்ட் அணியில் விளையாடியவர். தோனியின் வருகைக்குப் பின்பு இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பார்த்திவுக்கு அரிதாகவே கிடைத்தது. இப்போது அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லையென்றாலும் ஐபிஎல் தொடர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

இப்போது ஆகாஷ் சோப்ராவுடன் நேரலையில் பேசிய பார்த்திவ் படேல் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார், அதில் "கோலியின் கேப்டன்சி வித்தியாசமானது. அவர் அனைத்திலும் முன்னிருந்து முக்கியத்துவப்படுத்தி செயல்பட வேண்டும் என நினைப்பார். எப்போதும் ஆக்ராஷமோக இருப்பார், அது அவருடைய பாணி. ஆனால் தோனியும், ரோகித் சர்மாவும் அப்படி அல்ல. அவர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். அதற்கு அப்படியே எதிராக கோலி செயல்படுவார்" என்றார்.

மேலும் தொடர்ந்த பார்த்திவ் படேல் "தோனி ஒவ்வொரு வீரரின் திறன் பற்றி நன்கு அறிவார். அந்த வீரரின் முழு திறனையும் திறமையையும் அறிந்து அவர்களின் ஆற்றலை வெளியே கொண்டு வருவார். ரோகித் சர்மா திட்டமிடுதலில் கெட்டிக்காரர். மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவதிலேயே அதை நாம் தெரிந்துக் கொள்ளலாம். 2014 ஐபிஎல் போட்டியில் இருந்து ரோகித் தன் திறனை நன்றாகவே வளர்த்துக்கொண்டார். வீரர்களை உபயோகப்படுத்துவதில் தோனியும், ரோகித்தும் சிறந்தவர்கள்" என தெரிவித்துள்ளார்.