சமீப காலமாக தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் உலா வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் விதமாக தோனியின் நெருங்கிய நண்பர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை கலங்கடித்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக ஜொலித்த நட்சத்திர நாயகன் தோனியின் ஓய்வு குறித்த கருத்துக்கள் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது முதலே, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை போட்டிகளில் தோனியின் வழக்கமான ஆட்டம் வெளிப்பட தவறிய நிலையில் அந்த அதிர்வலைகள் மேலும் வலுப்பெற்றன.
இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் கடைசி போட்டியே,சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என பிசிசிஐ-ன் மூத்த நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார். இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களையும், சமூக வலைதளங்களையும் வட்டமிட்டு வந்த நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரும், மேலாளருமான அருண் பாண்டே கூறிய செய்தி ரசிகர்களை கலங்கடித்துள்ளது.
சமீப காலமாக பேட்டிங் செய்யும் போது இன்னிங்ஸ்களின் நடுவே தோனி பேட்களை மாற்றி விளையாடுவதே, அவர் விரைவில் ஓய்வு பெறவுள்ளதற்கான ஒரு விதமான ஜாடை தான் என்று அருண் பாண்டே கூறியுள்ளார். தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை SG மற்றும் VAMPIRE வியாபாரக் குறிகள் கொண்ட பேட்களுடன் தொடங்கினார்.
பின்னர் REEBOK,SPARTAN உள்ளிட்ட பல்வேறு முன்னனி நிறுவன குறியீடு கொண்ட பேட்களுடன் அவர் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி காலத்தில் உள்ள தோனி தான் விரும்பி விளையாடிய பேட்களுக்கும்,அதன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலே தற்போது பேட்களை மாற்றி விளையாடுகிறார் என்று அருண் பாண்டே கூறியுள்ளார்.